ஜல்லி கிரஷர் ஆலை அமைக்க எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு


ஜல்லி கிரஷர் ஆலை அமைக்க எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

அரவக்குறிச்சி அருகே ஜல்லி கிரஷர் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் அரவக்குறிச்சி அருகே சாந்தப்பாடி கிராமம் கோட்டப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் மனு கொடுக்க வந்திருந்தனர். பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது:-

சாந்தப்பாடி கிராமத்தில் ஜல்லி கிரஷர் ஆலை அமைக்கும் முயற்சியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த இடத்தின் அருகே விவசாய நிலங்கள், ஆடு, மாடு, கோழி போன்ற பிராணிகள் வளர்கிற இடமாகவும் உள்ளது. ஜல்லி கற்களை பொடியாக்கும் போது அதில் இருந்து வெளிப்படும் துகள்கள் காற்றில் கலந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் படர்ந்து விவசாயம்செய்வதற்கும், கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபடுவதற்கும் பயனற்ற நிலை ஏற்படும்.

ஜல்லி கற்களின் துகள்கள் காற்றில் கலந்து மாசுபடும் போது பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்படும். எனவே மேற்படி ஆலை அமைக்க தடை விதித்து பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இதேபோல கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் உப்பிடமங்கலம் பேரூர் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், “உப்பிடமங்கலம் முதல் வையாபுரி கவுண்டனூர் வரை உள்ள சாலை மற்றும் 7-வது வார்டுக்கு உட்பட்ட புகையிலை குறிச்சியானூர் சாலை ஆகிய 2 சாலைகளும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவில் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. வாகனங்கள் செல்வதற்கு சிரமமான நிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த சாலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.

மண்மங்கலம் அருகே அச்சமாபுரத்தை சேர்ந்த ஞானசேகர் கொடுத்த மனுவில், “திருமுக்கூடலூரில் இருந்து நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கு 15 கிராமங்களின் வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த பஸ் சேவை நிறுத்தப்பட்டது. சரியான வருவாய் இல்லை என்ற காரணத்தால் பஸ்சை நிறுத்தி விட்டனர். தனியார் பஸ்கள் வழக்கம் போல சென்று வருகிறது. திருமுக்கூடலூர்- மோகனூர் அரசு பஸ் சேவையை மீண்டும் காலை நேரத்துடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரிடமும் மனு கொடுத்துள்ளோம். இந்த பஸ்சை காட்டுப்புத்தூர் வரை வழித்தடம் நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மொபட்டில் பெட்ரோல் நிரப்பிய கேன் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வங்கிக்கு வந்த இருவர் அந்த மொபட்டை உள்ளே நிறுத்தி விட்டு சென்றிருந்தனர்.

பெட்ரோல் நிரப்பிய கேனை கண்ட தனிப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட 2 பேரிடம் விசாரித்தனர். இதில் மற்றொரு வண்டிக்கு பெட்ரோல் ஊற்ற கேனில் வாங்கி செல்வதாக கூறினர். பாதுகாப்பற்ற முறையில் பெட்ரோலை எடுத்து செல்ல வேண்டாம் எனவும், அதே வண்டியில் பெட்ரோலை ஊற்றி செல்லும்படியும் தனிப்பிரிவு போலீசார் கூறினர். இதையடுத்து கேனில் இருந்த பெட்ரோலை அதே வண்டியில் ஊற்றி சென்றனர். மனு கொடுக்க வந்தவர்கள் தீக்குளிக்க முயற்சித்து பெட்ரோலை கேனில் எடுத்து வந்திருக்கலாம் என கருதி முன்னெச்சரிக்கையாக தனிப் பிரிவு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்தனர். 

Next Story