கலங்கலான குடிநீரை கொண்டு வந்து பெண்கள் கலெக்டரிடம் முறையீடு


கலங்கலான குடிநீரை கொண்டு வந்து பெண்கள் கலெக்டரிடம் முறையீடு
x
தினத்தந்தி 6 Feb 2018 4:15 AM IST (Updated: 6 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

கலங்கலான குடிநீரை பாட்டிலில் கொண்டு வந்து பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்“்் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அம்மா இருசக்கர வாகனம், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 243 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

அரியலூர் 8-வது வார்டு அழகப்பாநகரை சேர்ந்த பெண்கள், கலங்கலான குடிநீரை பாட்டிலில் எடுத்து கொண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள தெருக்களிலும், வீடுகளுக்கு குழாய் மூலமும் பெறப்படும் குடிநீர் கலங்கலாகவே வருகிறது. மேலும் அந்த நீரில் தூர்நாற்றம் வீசுகிறது. இதனை சரிசெய்து தூய்மையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்ட ரிடம் முறையிட்டனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டரிடம், கோரிக்கை மனுக்கள் அளித்த இரண்டு மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை உடனடியாக ஏற்று, அவர்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மனவளர்ச்சி குன்றிய 1 நபருக்கு மாதம் ரூ.1,500-க்கான பராமரிப்பு உதவித்தொகைக்கான ஆணையினையும் மற்றும் 1 நபருக்கு தொழு நோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்ததற்கான பராமரிப்புத்தொகை ரூ.1,500-க் கான ஆணையினையும் கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலாஜி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் லட்சுமிபிரியா சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதன் பேரில், அழகப்பா நகரில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு குடிநீர் குழாய்களில் கசிவு ஏதும் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 

Next Story