நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2018 4:30 AM IST (Updated: 6 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் தி.மு.க. - கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர்,

மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதல் கோரி பெரம்பலூர் புதிய பஸ்நிலைய பகுதியில் பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாதுரை வரவேற்று பேசினார். பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் கருணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றபோதும் நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மாணவ, மாணவிகள் அடையும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்குவதை கைவிட வேண்டும், அரசு மருத்துவர்களுக்கு உயர் மருத்துவ கல்வியில் 50 சதவித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நீட் தேர்வு விவகாரத்தின் மவுனம் காத்து வரும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், நகர தலைவர் ஆறுமுகம் உள்பட திராவிடர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட தி.மு.க.வினர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்றார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க மாவட்ட செயலாளர் சின்னப்பா, தி.மு.க. இளைஞரணி மாநில இணை செயலாளர் சுபா சந்திரசேகர், எம்.ஜி.ஆர். கழக மாவட்ட செயலாளர் கலைவாணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வநம்பி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் இதில் பங்கேற்றனர். நீட் தேர்வினால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எடுத்து கூறி மத்திய-மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Next Story