வகுப்பிற்கு செல்லாததை கண்டித்தபோது பள்ளியில் தலைமைஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து


வகுப்பிற்கு செல்லாததை கண்டித்தபோது பள்ளியில் தலைமைஆசிரியருக்கு சரமாரி கத்திக்குத்து
x
தினத்தந்தி 6 Feb 2018 4:45 AM IST (Updated: 6 Feb 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

வகுப்புக்கு செல்லாததை கண்டித்த தலைமைஆசிரியரை பள்ளியில் வைத்தே சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு பிளஸ்-1 மாணவன் தப்பி ஓடிய சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ரெயில்நிலைய ரோட்டில் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு நிதியுதவி பெறும் இந்த பள்ளியில் தலைமைஆசிரியராக பாபு (வயது 52) பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1000-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் மகன் ஹரிகரன் (வயது 19) பிளஸ்-1 படித்து வருகிறான். நேற்று காலை பள்ளி வழக்கம்போல் தொடங்கியது. ஆனால் ஹரிகரன் உள்பட சில மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல் பள்ளியில் மேல்தளத்தில் காலியாக இருந்த வகுப்பறையில் அமர்ந்திருந்துள்ளனர். அப்போது ஹரிகரனுடன் இருந்த மாணவன் ஒருவன் வெளியே சென்று விட்டு ஒரு நோட்டுடன் அந்த வகுப்புக்கு வந்து கொண்டிருந்தான்.

அதே நேரத்தில் தலைமைஆசிரியர் பாபு வகுப்பறைகளை பார்வையிட்டவாறே நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த மாணவன் தனியாக வந்ததை பார்த்ததும் ஏன் வகுப்புக்கு செல்லவில்லை என கேட்டு அவனை கண்டித்து முதுகில் தட்டினார். உடனே அந்த மாணவன் அதிர்ச்சியுடன் அங்கிருந்து வகுப்பறையை நோக்கி ஓடினான். இந்த நிலையில் காலியாக இருந்த வகுப்பறையில் ஹரிகரன் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தான். அந்த வகுப்பறைக்குள் நுழைந்தபோது மேலும் 3 மாணவர்களும் இருந்தனர். அவர்களை தலைமைஆசிரியர் பாபு கண்டித்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு ஹரிகரன் இருந்த இடத்துக்கு வந்தார்.

அவனையும் கண்டித்தபோது ஹரிகரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தலைமைஆசிரியர் பாபுவை வயிறு, காது, முகத்தில் சரமாரியாக குத்தினான்.

உடனே வயிற்றை பிடித்தவாறே ‘டேய்’, ’டேய்’ என பாபு அலறியவாறு ரத்தம் சொட்டச்சொட்ட கீழே விழுந்தார். அவரது சத்தத்தை கேட்டதும் அங்கிருந்து ஓடிய மற்ற மாணவர்கள், கீழே உள்ள வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் துடிதுடித்துக்கொண்டிருந்த தலைமைஆசிரியர் பாபுவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வைத்தனர். அங்கு முதலுதவி அளித்தபின் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவன் ஹரிகரன் தப்பி ஓடிவிட்டான். தகவல் அறிந்த திருப்பத்தூர் தாசில்தார் சத்தியமூர்த்தி, திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமைஆசிரியர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.

இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஹரிகரனை தேடி வருகின்றனர்.


Next Story