தமிழகத்தில், தேர்தல் நடக்காமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது டி.டி.வி. தினகரன் பேட்டி


தமிழகத்தில், தேர்தல் நடக்காமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 7 Feb 2018 4:45 AM IST (Updated: 7 Feb 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தேர்தல் நடக்காமலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருவாலங்காடு,

தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த 4 நாட்கள் நடத்திய டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., நேற்று கதிரா மங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடும் மக்களை சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கதிராமங்கலம் மக்களின் பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக பார்க்ககூடாது. அரசுக்கு வருமானம் கிடைக் கிறது என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது. நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் காவிரி படுகையை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுப்போம். மண்ணை காக்க போராடிய கதிராமங்கலம் மக்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.

கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. ஆய்வால் பாதிப்பு இல்லை என்றால் அவர்கள் அதை வெளிப் படையாக மறுத்து ஆதாரத்தோடு தெரிவிக்க வேண்டும். இங்கு குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே காவிரி படுகை பகுதியில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். எங்களின் படை பெரியது. நாங்களும் மக்களுடன் இணைந்து போராடுவோம்.

தமிழகத்தில் தற்போது காலாவதியான அரசுதான் நடக்கிறது. எந்த நேரத்திலும் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். உயர்கல்வித்துறையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறினார். அதற்காக துடிப்பான அதிகாரியை நியமிக்க கூறியதற்கு தான் பழனிசாமி தரப்பினர் எங்களிடம் பிரச்சினையை தொடங்கியது.

தற்போது பாரதியார் பல் கலைக்கழக துணைவேந்தர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் தேர்தல் வராமல் ஆட்சி மாற்றம் வருமா என்ற கேட்கிறீர்கள். அதற்கு வாய்ப்புள்ளது. ஆறு பேரை தவிர மற்றவர்கள் வந்தால் வரவேற்போம். தற்போதைய ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெறாமலேயே புதிய ஆட்சி அமையும். எம்.எல்.ஏக்கள் யாரும் பதவியை துறக்க விரும்ப மாட்டார்கள். அதனால் இந்த ஆட்சி மாற்றம் விரைவில் நடக்க வாய்ப்புள்ளது.

குறிப்பிட்ட அந்த 6 பேர் யார் என்பது உங்களுக்கே தெரியும். அவர்களிலும் ஒரு சிலர் மனம் திருந்தி எங்களுடன் இணையலாம். அதனால் தற்போது அவர்கள் பெயரை சொல்வது சரியாக இருக்காது. மேலும் நியாயத்திற்காக பதவியை தியாகம் செய்து எங்களுடன் உள்ள 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் முதல்வராக வருவார். நான் முதல்-அமைச்சராக வர வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் முன்பு சசிகலாவின் வக்கீல் ஆஜர் ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story