வருவாய்த்துறை அலுவலர்கள் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் கைது


வருவாய்த்துறை அலுவலர்கள் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயற்சி டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Feb 2018 3:45 AM IST (Updated: 7 Feb 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

பென்னாகரம் அருகே மணல் கடத்தலை தடுத்த வருவாய்த்துறை அலுவலர்கள் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பவளந்தூர் ஓடையில் டிராக்டரில் மணல் அள்ளுவதாக தாசில்தார் சேதுலிங்கத்திற்கு புகார் வந்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகிரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது ஓடையில் இருந்து மணல் அள்ளி வந்த டிராக்டரை பளிஞ்சரஅள்ளி பகுதியில் அலுவலர்கள் நிறுத்தினர்.

ஆனால் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வருவாய்த்துறையினர் மீது மோதுவது போல் வேகமாக வந்தார். இதனால் அலுவலர்கள் அங்கிருந்து நகர்ந்து உயிர் தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகிரி பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தினார்.

அப்போது ஓடையில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்ததும், டிரைவர் ராஜேந்திரன் (வயது 27) என்பதும், டிராக்டர் உரிமையாளர் பெரியசாமி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பெரியசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மணலுடன் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story