ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கலங்கிய குடிநீரை எடுத்து வந்து பொதுமக்கள் முற்றுகை


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கலங்கிய குடிநீரை எடுத்து வந்து பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 7 Feb 2018 4:30 AM IST (Updated: 7 Feb 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கலங்கிய குடிநீரை எடுத்து வந்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அழகியமண்டபம்,

தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நுள்ளிவிளை ஊராட்சி கொன்னக்குழிவிளை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு குடிநீர் வழங்கப்படுவதாகவும், அவ்வாறு வரும் தண்ணீர் சுகாதாரமற்று கலங்கிய நிலையில் இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் கொடுக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர்.

இந்தநிலையில், கொன்னக்குழிவிளையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் நேற்று கலங்கிய குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து கோழிப்போர்விளையில் உள்ள தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், நுள்ளிவிளை ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும், இதனால், தொற்றுநோய் பரவுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த போராட்டத்தில் ஊர்தலைவர் அகஸ்டின், கத்தோலிக்க சங்க தலைவர் மரிய ஜான் தாமஸ், செயலாளர் மரியதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பொதுமக்களிடம் ஒன்றிய அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓரிரு நாட்களில் சீராக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல், நுள்ளிவிளை ஊராட்சி அலுவலகத்திலும் சுத்தமான குடிநீர் கேட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டது. 

Next Story