வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு கோர்ட்டு இன்று அறிவிக்கிறது


வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு கோர்ட்டு இன்று அறிவிக்கிறது
x
தினத்தந்தி 7 Feb 2018 4:30 AM IST (Updated: 7 Feb 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என நாகர்கோவில் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படுகிறது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 23). இவர் கடந்த 5-7-2009 அன்று இரவில் பீமநகரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் நாகராஜனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கரையான்குழி பகுதியைச் சேர்ந்த சார்லஸ், நாகர்கோவில் மறவன்குடியிருப்பைச் சேர்ந்த அன்பரசு ஆகிய 2 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பிருப்பதும், பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பதிசாரத்தைச் சேர்ந்த ராஜன் என்ற குட்டுவம் ராஜன், வெள்ளமடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி கருப்பையா விசாரித்து வந்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சார்லஸ், அன்பரசு ஆகிய 2 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். ராஜன், சுப்பிரமணியன் ஆகிய 2 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சார்லஸ், அன்பரசு ஆகியோருக்கான தண்டனை விவரம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இன்று (புதன்கிழமை) அவர்கள் 2 பேருக்குமான தண்டனை குறித்த இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடைபெற உள்ளது. அதையடுத்து நீதிபதி தண்டனை விவரத்தை அறிவிப்பார். இந்த வழக்கில் அரசு தரப்பில், மாவட்ட அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் ஆஜரானார்.

குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அன்பரசு, ஏற்கனவே நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் சரகம் மறவன்குடியிருப்பில் நடந்த துணைவேந்தர் மாலிக் முகமது உள்பட 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடையவர். அந்த வழக்கில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல்முறையீடு செய்ததில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story