12 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் திடீர் மறியல் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்


12 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் திடீர் மறியல் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Feb 2018 1:29 AM GMT (Updated: 8 Feb 2018 1:29 AM GMT)

மாத்தூர் தொட்டிப்பாலம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 12 பஸ்களை அவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவட்டார்,

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் விளங்கி வருகிறது. திருவட்டார் அருகே இந்த தொட்டிப்பாலம் உள்ளது. பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, இரண்டு மலைக்குன்றுகளுக்கு இடையே தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டதாகும்.

அதிக உயரம் கொண்ட இந்த பாலமானது, கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாகவும் விளங்குகிறது. எனவே மாத்தூர் தொட்டிப்பாலத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். திருவட்டாரில் இருந்து அந்த பாலம் செல்வதற்கான சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைத்து தார்சாலையாக மாற்ற ஜல்லி கற்களை விரித்தனர். அதன்பின் கடந்த 4 மாதங்களாக அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டதாக தெரிகிறது. இதனால் சாலை முழுவதும் பல இடங்களில் ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதுடன், பள்ளங்களும் உருவாகியதால் அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

சமீபத்தில் அந்த வழியாக சென்ற ஒரு பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ் பள்ளத்தில் இறங்கியபோது படிக்கட்டில் பயணம் செய்த பெண் ஒருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

நேற்று காலையில் அந்த சாலையில் மோட்டார்சைக்கிளில் ஒரு தம்பதியினர் குழந்தையுடன் வந்தனர். அவர்கள் தாணிவிளை பகுதியில் சென்றபோது, சாலையில் உள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்தனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

எனவே விபத்தை ஏற்படுத்தும் சாலையாக அது மாறி வருவதால் ஆவேசம் அடைந்த மாத்தூர், தாணிவிளை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டனர். அவர்கள், அருவிக்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் தலைமையில் தாணிவிளை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்கள் உள்பட 12 பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும், தக்கலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரியும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினார்கள். அப்போது, சாலையை சீரமைக்கும் பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதை ஏற்று மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பின்பு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.


Next Story