20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 7:15 AM IST (Updated: 8 Feb 2018 7:15 AM IST)
t-max-icont-min-icon

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

திருவண்ணாமலை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் 2 கட்டங்களாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி, முதல் நாளான நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தாலுகா அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய்த்துறை அலுவலர்கள் விடுமுறை எடுத்ததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. போராட்டத்தினால் பெரும்பாலான பணிகள் நடைபெறவில்லை.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க தலைவர் ஜோதிசங்கர் கூறுகையில், ‘20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் போராடி வருகிறோம். அதன் ஒரு அம்சமாக இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) ஆகிய 2 நாட்கள் வருவாய்த்துறையினர் வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 500 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும்’ என்றார். 

Next Story