நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 474 காளைகள் 16 பேர் காயம்


நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 474 காளைகள் 16 பேர் காயம்
x
தினத்தந்தி 8 Feb 2018 8:31 AM IST (Updated: 8 Feb 2018 8:31 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே அலங்காநத்தம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 474 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டி தள்ளியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 16 பேர் காயம் அடைந்தனர்.

எருமப்பட்டி,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் தேவராயபுரம் பகுதிகளில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20-ந் தேதி பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடந்தது.

இதைதொடர்ந்து நேற்று அலங்காநத்தம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடத்தப்பட்டது. முன்னதாக ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளையும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பரிசோதனை செய்தனர்.

மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை அடையாளம் காணும் வகையில் மஞ்சள் நிறத்தில் பனியன் வழங்கப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு மாடுபிடி வீரர்கள் உதவி கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம், கரட்டுப்புதூர், போடிநாயக்கன்பட்டி பகுதிகளை சேர்ந்த காளைகள், திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காளைகள் என மொத்தம் 474 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த 174 மாடுபிடி வீரர்கள் மைதானத்தில் இருந்தனர்.

பின்னர் மாடுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து களத்தில் இறக்கி விடப்பட்டன. அவை தங்களை அடக்க முயன்ற வீரர்களை தூக்கி வீசும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது. அதனையும் மீறி காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கம், வெள்ளிக்காசுகள், சைக்கிள், குடம், சில்வர் பாத்திரங்கள், மின்விசிறிகள், வேட்டி-சட்டை மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோல் அடக்க முடியாத மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வாடிவாசலில் இருந்து வெளியே வரும் பெரும்பாலான மாடுகள் ஓட்டம் பிடித்து விட்டாலும், ஒருசில மாடுகள் மீண்டும் வாடிவாசலை நோக்கி வந்து, வீரர்களை பயமுறுத்தியதை காண முடிந்தது.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் பண்ணைகாரன்பட்டி சபரி (வயது 23), எருமப்பட்டி மோகன் (23), அலங்காநத்தம் இளங்கோ (21), அக்கியம்பட்டி சதீஷ்குமார் (31), ஆத்தூர் கூலமேடு ராஜா (25), திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பெரியமேடு பகுதியை சேர்ந்த இளங்கோ (20) உள்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 16 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இவர்களில் மாடுபிடி வீரர் சபரி (23) என்பவர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மைதானத்தின் அருகிலேயே முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவக்குழுவினர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லுக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள 15 பேரும் லேசான காயங்களுடன் வீடு திரும்பினர்.

இந்த ஜல்லிக்கட்டை காண எருமப்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்தும் திரளான பொதுமக்கள் அலங்காநத்தம் கிராமத்தில் கூடி இருந்தனர். இதனால் ஜல்லிக்கட்டு நடைபெற்ற மைதானத்தை சுற்றிலும் திருவிழா போல பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் மாடுபிடி வீரர்களை கை தட்டியும், விசில் அடித்தும் உற்சாகப் படுத்தினர்.

இதேபோல் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி, அவற்றின் மீது ஏறியும் ஏராளமான பொதுமக்கள் ஜல்லிக்கட்டை ரசித்தனர். இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story