நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர்நீத்த மாணவி அனிதாவின் நினைவாக நூலகம்


நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர்நீத்த மாணவி அனிதாவின் நினைவாக நூலகம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:02 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

செந்துறை அருகே குழுமூர் கிராமத்தில், நீட் தேர்வுக்கு எதிராக போராடி உயிர்நீத்த மாணவி அனிதாவின் நினைவாக கட்டப்படும் நூலகத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அடிக்கல் நாட்டினார்.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி அனிதா. இவர் பிளஸ்-2 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற போதிலும் நீட் தேர்வினால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் போய்விட்டது.

மேலும் தமிழக ஏழை மாணவ, மாணவிகளின் நலன்கருதி நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோர்ட்டு வரை சென்று போராடினார். ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அனிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி தூக்குப்போட்டு தன்னை மாய்த்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அந்த வகையில், மாணவி அனிதா நினைவாக அந்த கிராமத்தில் நினைவு நூலகம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமசந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான சிவசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது குன்னம் எம்.எல்.ஏ., ராமசந்திரன்நூலகம் கட்டுவதற்காக ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் லாரன்ஸ் பேசுகையில், “சேலத்தில் ஜல்லிக்கட்டிற்காக உயிரிழந்த லோகேஸின் அம்மாவுக்கு மகனாக நான் அவர்களுக்கு சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்தேன். அதேபோல் அனிதாவிற்கும் ஒரு அண்ணன் என்ற முறையில் நூலகம் கட்டி கொடுக்க உள்ளேன். பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வருகின்ற தேர்தலில் யாரும் மிக்சி மற்றும் கிரைண்டருக்கோ ஓட்டு போட வேண்டாம். கல்வி, மருத்துவத்தை யார் இலவசமாக தருவார்களே அவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று கூறினார். முன்னதாக அனிதாவின் தந்தை சண்முகம் வரவேற்றார். முடிவில் அண்ணன் மணிரத்தினம் நன்றி கூறினார். 

Next Story