திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன்


திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தங்கையை வெட்டிக்கொன்ற அண்ணன்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:02 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

முறை தவறிய ஒரு தலைக்காதலால் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

திருச்சி,

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் குடித்தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 57). இவரது மூத்த அண்ணன் திருஞானசம்பந்தத்தின் மகன் சக்திகுமார் (33). இவர் ஸ்ரீரங்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமலதா (27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

ஹேமலதாவை திருச்சியை சேர்ந்த வீரமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்கான நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற இருந்தது. நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் சக்திகுமார் சிவசுப்பிரமணியனின் வீட்டுக்கு அரிவாளுடன் வந்தார்.

ஹேமலதாவின் திருமணம் தொடர்பாக தனது சித்தப்பாவான சிவசுப்பிரமணியனுடன் பேசிக்கொண்டிருந்த சக்திகுமார் திடீரென அவரது கையில் அரிவாளால் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

இதனை பார்த்து ஓடிவந்த ஹேமலதாவின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் சக்திகுமார் அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டு தாங்க முடியாமல் அலறிய ஹேமலதா அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

ஹேமலதாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்து அவரது சித்தப்பா வைரவேல் (50) ஓடிவந்தார். அவரையும் சக்திகுமார் அரிவாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண்ணை வெட்டி கொலை செய்து விட்டு, தனது சித்தப்பாமார்களான சிவசுப்பிரமணியன், வைரவேல் ஆகியோரையும் வெட்டிவிட்டு சக்திகுமார் ஓடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் உத்தரவின் பேரில் கொள்ளிடம் டோல்கேட் போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சக்திகுமாரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்திகுமார் நேற்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்-3 கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ரெஹனா பேகம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சக்திகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக சக்திகுமார் தங்கை முறையுள்ள தனது பெரியப்பா மகளை வெட்டி கொலை செய்ததாகவும், அத்துடன் உறவினர்கள்2 பேரை வெட்டிக்கொல்ல முயன்றதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் இந்த வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு:-

சக்திகுமார் தங்கை முறையான ஹேமலதாவை அவர் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே தனது மோட்டார் சைக்கிளில் தான் கல்லூரிக்கு அழைத்து செல்வாராம். மேலும் தற்போது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின்னரும் அவரே பல முறை தனது வாகனத்தில் கொண்டு சென்று விடுவது, திரும்ப அழைத்து செல்வது போன்ற வேலைகளையும் செய்து வந்தார்.

அப்போது தங்கை என்ற உறவையும் மீறி, அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த முறைதவறிய காதலுக்கு ஹேமலதா உடன்படவில்லை என்றாலும் சக்திகுமாருக்கு அவர் மீது கொண்டிருந்த மோகம் குறையவில்லை.

இந்த நிலையில் தான் ஹேமலதாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து உள்ளது. இதனை அறிந்த சக்திகுமார் தான் விரும்பிய ஹேமலதாவை யாரும் திருமணம் செய்து விடக்கூடாது என்ற வெறியில் விபரீத முடிவெடுத்து அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு அவரது தந்தையையும், இன்னொரு சித்தப்பாவையும் வெட்டி கொல்ல முயன்று இருக்கிறார்.

போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்து உள்ளன.


Next Story