ஒருதலைக்காதலால் இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி 3 பேருக்கு வலைவீச்சு


ஒருதலைக்காதலால் இளம்பெண்ணை காரில் கடத்த முயற்சி 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Feb 2018 3:45 AM IST (Updated: 9 Feb 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே ஒரு தலைக்காதலால் இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற கும்பல், பொதுமக்கள் திரண்டதும் தப்பி ஓடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடிவருகிறார்கள்.

நாகர்கோவில்,

தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 21 வயதுடைய ஒரு இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து பஸ்சில் வேலைக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல், நேற்றுமுன்தினம் காலையில் வேலைக்கு புறப்பட்ட அவர் மூலச்சல் பகுதியில் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு கார் திடீரென இளம்பெண்ணை வழிமறித்து நின்றது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் திகைத்து நின்றார். அப்போது, காரில் இருந்து 3 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கி இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து காருக்குள் இழுத்து போட முயன்றது. அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

இதற்கிடையே அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்ற பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். பொதுமக்களை கண்டதும் அந்த கும்பல் இளம்பெண்ணை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து அந்த பெண் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கீழமூலச்சலை சேர்ந்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 3 பேர் சேர்ந்து இளம்பெண்ணை கடத்த முயன்றது தெரிய வந்தது.

பிரசாத் தக்கலையில் உள்ள ஒரு பத்திரம் எழுத்தர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இதே அலுவலகத்தில் அந்த இளம் பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, இளம்பெண் மீது பிரசாத்துக்கு ஒருதலை காதல் ஏற்பட்டது. இவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்தார். ஆனால், பிரசாத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால், இளம்பெண் பத்திரம் எழுத்தர் அலுவலகத்துக்கு வேலை செல்வதை நிறுத்தி விட்டார். பின்னர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இந்தநிலையில், இளம்பெண் வேலைக்கு செல்லும் வழியில் அவரை கடத்த முயன்றுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, பிரசாத் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story