கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2018 4:30 AM IST (Updated: 9 Feb 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் 2-வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணித்தன்மைக்கு ஏற்பவும், கால மாற்றத்துக்கு ஏற்பவும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். காலியாக உள்ள 10,218 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 2 நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று 2-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது.

குமரி மாவட்டத்தில் பெரும்பாலான வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 2-வது நாளாக நேற்றும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். எனவே அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகா அலுவலகங்களிலும் பணிகள் முடங்கியது. தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் வருவாய்த்துறை சான்று தொடர்பான பல்வேறு பணிகள், ரேஷன் கார்டு தொடர்பான பணிகளுக்காக தாலுகா அலுவலகங்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் பணிகள் எதுவும் நடைபெறாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள், மாவட்ட வழங்கல் அலுவலகம், சமூக பாதுகாப்புத்துறை அலுவலகங்கள் உள்பட வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அனைத்திலும் பணிகள் அடியோடு முடங்கியது.

வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருவதால் வருமானச்சான்று, சாதி சான்று, இருப்பிடச்சான்று போன்றவற்றை அப்ரூவல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மையங்கள், கேபிள் டி.வி. கூட்டுறவு சங்கங்கள் போன்றவற்றில் மக்கள் வருவாய்த்துறை சான்றுகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2-வது நாள் போராட்டம் தொடர்பாக குமரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் கூறும்போது, “2-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்திலும் 330 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கம்போல் நாங்கள் பணிக்கு திரும்ப இருக்கிறோம். எனவே அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களிலும் இன்று வழக்கம்போல் பணிகள் நடைபெறும்” என்றார். 

Next Story