மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க “ஹெல்ப் லைன்” சேவை திட்டம் தொடங்கப்படும்


மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க “ஹெல்ப் லைன்” சேவை திட்டம் தொடங்கப்படும்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:30 AM IST (Updated: 11 Feb 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து உரிய ஆலோசனை வழங்கும் பொருட்டு தமிழகத்தில் விரைவில் ‘ஹெல்ப்லைன்’ சேவை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பு சார்பில், இந்த பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வில் கடந்த கல்வியாண்டில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. முன்னாள் மாணவர் அமைப்பின் கவுரவ தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார். அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மருதைராஜா, சந்திரகாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் சாந்தா வாழ்த்தி பேசினார்.

ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க...

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

வறுமையின் காரணமாக மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் இருந்த போது, மகத்தான சத்துணவு திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்து மக்கள் மனதில் சரித்திர நாயகனாக திகழ்ந்தார். கோடீசுவரர்கள் மட்டும் உபயோகப்படுத்தி வந்த மடிக்கணினியை, அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கொடுத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் ஏழைகளே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என முழக்கமிட்ட அவர், பள்ளிக்கல்வித்துறைக்காக எண்ணற்ற பல திட்டங்களை கொண்டு வந்தார். இவர்களது வழியில் தற்போதைய பள்ளிக்கல்வித்துறையானது, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகிறது.

மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு சீரிய திட்டங்கள் புதிதாக தொடங்கப்பட இருக்கின்றன. அதன் முன்னோட்டமாக மாணவர்களின் மனஉளைச்சலை தடுக்கும் பொருட்டு ரேங்கிங் சிஸ்டம் மாற்றி அமைக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

அந்த வகையில், மாணவ-மாணவிகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உரிய ஆலோசனை வழங்கிடவும், பாட சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்து வைத்து முறையாக படிப்பது குறித்தும், ஆசிரியர்கள்-மாணவர்கள் இடையேயான இடைவெளியை குறைத்து நல்லிணக்கத்தை உருவாக்கவும், உயர்கல்வி பயில்வதற்கான ஆலோசனை வழங்குவது உள்ளிட்டவற்றுக்காக மாணவ- மாணவிகளுக்கான “ஹெல்ப்லைன்“ சேவை என்கிற திட்டம் விரைவில் தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் வருகிற கல்வி ஆண்டு முதல் கான்வென்ட் பள்ளிகளை போல், அரசு பள்ளிக்கும் புதிதாக வண்ணசீருடைகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக இன்றைய (நேற்று) தினத்தந்தியில் செய்தி வெளிவந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.

விபத்து நடந்தால் உடனே 108 ஆம்புலன்சு சேவை கிடைப்பதை போல், மாணவர்கள் விபத்திற்குள்ளானால் அவர்களுக்கு 48 மணி நேரத்தில் விபத்து நிவாரண நிதி வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. எந்த மாநிலத்திலும் மாணவர்கள் நலனுக்காக இது போன்ற ஒரு திட்டம் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அனைத்து அரசு பள்ளிகளிலும் உயர்கல்விகள் குறித்து விளக்கும் வகையில் எத்தனை வகையான படிப்புகள் உள்ளன என்பதனை தெளிவு படுத்த விளம்பர பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே போல் மாணவர்களின் கல்விதரத்தை மேம்படுத்தும் பொருட்டு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மிஞ்சுகிற வகையில், புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது. பொறியியல் பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளால் வேலைக்கு உத்தரவாதம் தரக்கூடிய கல்வியை அளிக்க முடியும். பிளஸ்-2 முடித்தவுடனேயே வேலை கிடைக்கும் என்கிற நிலை வரும். ராமேசுவரத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து உலகமே போற்றக்கூடியவராக திகழ்ந்தவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். எனவே கல்வி திட்டங்களை மாணவ-மாணவிகள் நன்கு பயன்படுத்தி கொண்டு அப்துல்கலாம் போல் சமுதாயத்தில் சிறந்த மனிதர்களாக உருவெடுக்க வேண்டும். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பெரம்பலூரில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்க விரைவில் உத்தரவு பிறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற குரும்பலூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி கல்வித்துறை அமைச்சர் பாராட்டினார். மேலும் தமிழக அரசின் வண்ணபென்சில்கள் வழங்கும் திட்டத்தின்கீழ் 1-5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வண்ணபென்சில்களை வழங்கினார். தொடர்ந்து அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு காமராசர் விருது வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் எஸ்.எஸ்.எல்.சி.யில் 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1½ லட்சம் மதிப்பிலான காசோலையையும், பிளஸ்-2 வில் 15 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலையையும், மற்றும் காமராசர் விருது சான்றிதழையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வழங்கினார். காமராசர் விருது வழங்கும் திட்டம் பெரம்பலூரில் தான் முதன் முதலில் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். முன்னதாக குரும்பலூர் பள்ளியை மேம்படுத்தும் பொருட்டு, ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை முன்னாள் மாணவர் அமைப்பினரிடம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலர் பிருதிவி ராஜன் மற்றும் குரும்பலூர் பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு நிர்வாகிகள் சண் முகதேவன், முகுந்தன், ரமேஷ், குப்புசாமி உள்பட மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று, 2017 மார்ச்சில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், 100 சதவித தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கினார்.

Next Story