கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 35 ஆயிரம் பேரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்


கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 35 ஆயிரம் பேரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 11 Feb 2018 4:15 AM IST (Updated: 11 Feb 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 35 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தஞ்சையில் நடந்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபபட்டது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்க தஞ்சை மண்டல கூட்டம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல துணைத்தலைவர் சிவக்குமார் வரவேற்றார்.

தஞ்சை மண்டல தலைவர் நடராஜன், பொருளாளர் கனிமொழி, ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கல்லூரி கல்வி தஞ்சை மண்டல இணை இயக்குனர் மனோகரன், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி முதல்வர் திருவள்ளுவன், மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி, கவுரவ விரிவுரையாளர் நலச்சங்க மாநில துணைத்தலைவர் வசந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டில் 10 மாதங்கள் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. தினந்தோறும் விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் ஆண்டில் அனைத்து மாதங்களும் பணி வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறையின்படி அனைத்து கல்வி தகுதியுடன் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் 35 ஆயிரம் பேரை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தஞ்சை மண்டலச் செயலாளர் ரமேஷ், மாநில பொதுச்செயலாளர் அருணகிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மண்டல துணை செயலாளர் ஹேமா நன்றி கூறினார்.


Next Story