அரசியல் லாபத்திற்காக எடியூரப்பா குடிசை வீடுகளில் தங்குகிறார்
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் லாபத்திற்காக எடியூரப்பா குடிசை வீடுகளில் தங்குகிறார் என்று முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி கெங்கல் அனுமந்தய்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று பெங்களூரு விதானசவுதாவில் உள்ள, அவரது உருவப்படத்திற்கு முதல்–மந்திரி சித்தராமையா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
காங்கிரஸ் கட்சி ஒரு போதும் ஜாதி மற்றும் மதத்தின் மூலமாக அரசியல் செய்ததில்லை. ஆனால் பா.ஜனதாவினர் ஜாதி, மத அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். மக்களிடையே மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார்கள். ஜாதிகளுடைய பிரச்சினை ஏற்படுத்தி தீ மூட்டும் வேலையில் பா.ஜனதாவினர் ஈடுபடுகின்றனர். ஜாதி, மதபிரச்சினையை தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்று நினைக்கின்றனர். அவர்களது கனவு ஒரு போதும் பலிக்காது.
சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் குடிசை வீடுகளில் எடியூரப்பா தங்குகிறார். எடியூரப்பா கர்நாடக முதல்–மந்திரியாக இருந்துள்ளார். அவர் முதல்–மந்திரியாக இருந்தபோது, ஏதாவது ஏழை வீட்டிற்கோ, குடிசை வசிப்பவர்களின் வீடுகளுக்கோ போய் தங்கி உள்ளாரா?. அரசியல் லாபத்திற்காக இதுபோன்று எடியூரப்பா குடிசை வீடுகளில் தங்குகிறார். அவரை பற்றி கர்நாடக மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். மக்களே அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.