பிரதமர் மோடி 24-ந் தேதி புதுவை வருகிறார் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்


பிரதமர் மோடி 24-ந் தேதி புதுவை வருகிறார் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 11 Feb 2018 5:45 AM IST (Updated: 11 Feb 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

ஆரோவில் பொன் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி புதுவை வருகிறார் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த வாரம் நானும், ஜான்குமாரும் டெல்லி சென்ற போது மத்திய நிதி மந்திரி, மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி, உள்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து பேசினோம். அப்போது புதுவை மாநிலத்திற்கு முறையாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டோம். நிதித்துறை மந்திரியும், நிதித்துறை செயலாளரை அழைத்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.

திட்டமில்லா செலவுக்கு கிடைக்க வேண்டிய நிதி, 6-வது, 7-வது ஊதியக்குழுக்களின் பாக்கி நிதி, தானே புயல் நிவாரண நிதி என மொத்தம் ரூ.6,662 கோடியை வழங்க வேண்டும் என்று கேட்டோம். புதுவை மாநிலத்திற்கு தனிக்கணக்கு தொடங்குவதற்கு முன்பாக இருந்த கடனை மத்திய உள்துறை அமைச்சகம் கட்ட வேண்டும். அதனை புதுவை மாநிலத்தின் மீது திணிக்க கூடாது என்று வலியுறுத்தினோம். அவரும் நிதி செயலரை அழைத்து புதுச்சேரிக்கு நிதியை தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளார். புதுச்சேரி அரசு கேட்ட நிதியை தர மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது. ஆனால் நிதித்துறை காலதாமதம் செய்து வருகிறது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி தருவதில் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கூட பிரதமர் மோடி தங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அந்த மாநில முதல்-அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுகிறது. மாநிலத்திற்கு மாநிலம் ஒரு மாதிரியாக செயல்படுகிறது.

சட்டசபை உள்ள டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை மத்திய அரசு தருகிறது. ஆனால் புதுச்சேரிக்கு தரவில்லை. புதுவை மாநில அரசு தான் வழங்க வேண்டியுள்ளது. 10 ஆண்டிற்கு முன்பு வாங்கப்பட்ட கடன்களை அடைத்து வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் ரூ.127 கோடி செலுத்தியுள்ளோம். இந்த மாதம் ரூ.100 கோடி செலுத்த உள்ளோம். அடுத்த மாதம் ரூ.177 கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சிக்கன நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

புதுச்சேரியை மத்திய நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும் என மத்திய நிதிக்குழு தலைவர் என்.கே. சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன். அவ்வாறு இணைத்தால் 42 சதவீத நிதி மத்திய அரசிடம் இருந்து நமக்கு கிடைக்கும். தற்போது 27 சதவீத நிதிதான் நமக்கு கிடைக்கிறது.

ரூ.7ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரம் கோடி மாநில அரசின் வருவாய், மீதியுள்ள 3 ஆயிரம் கோடியில் ரூ.576 கோடியை மட்டுமே மத்திய அரசு தருகிறது. மீதித்தொகை வெளிச்சந்தை மற்றும் நபார்டு, ஹட்கோ மூலம் திரட்டி வருகிறோம். அதனால் வட்டி கட்டும் நிலை உள்ளது. எனவே புதுச்சேரி அரசு நிதி சிக்கலான சூழ்நிலையில் உள்ளது.

ஆரோவில் 50 ஆண்டு பொன் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி புதுவை வருகிறார். அப்போது புதுவை துறைமுக திட்டத்தை அவர் தொடங்கி வைக்க வேண்டும் என்று கடிதம் மூலம் கேட்டுள்ளோம். தற்போது துறைமுகம் தூர்வாரப்பட்டு நாளை (திங்கட்கிழமை) வெள்ளோட்டம் விடப்பட உள்ளது.

பிரதமர் புதுவை வரும் போது நானும், அமைச்சர்களும் அவரை நேரடியாக சந்தித்துப் பேச நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். அப்போது புதுவையில் நிதிநிலை குறித்து எடுத்துக்கூறி பிரதமர் நேரடியாக தலையிட்டு புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய நிதியை தர வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம். பிரதமரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

புதுவை துறைமுகம் தூர்வாரும் திட்டம் மத்திய அரசின் நிறுவனம் மூலம் ரூ.14 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.7 கோடியை புதுவை அரசு கொடுத்துள்ளது. மீதம் உள்ள ரூ.7 கோடியை மத்திய கப்பல் கழகம் ஏற்றுக்கொண்டுள்ளது. முகத்துவாரம் தூர்வாரும் பணி மார்க் நிறுவனம் மூலம் மேற்கொண்டு முடித்துள்ளோம். இதனால் துறைமுகம் தற்போது செயல்பாட்டிற்கு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story