‘நீட்’ நுழைவு தேர்வில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது கி.வீரமணி குற்றச்சாட்டு


‘நீட்’ நுழைவு தேர்வில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது கி.வீரமணி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Feb 2018 4:30 AM IST (Updated: 12 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ நுழைவு தேர்வில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர்,

தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட உள்ளது. ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு முழு தகுதியாக அவர் ரூ.100 கோடி அபராதம் மற்றும் சிறைத்தண்டனை பெற்றார் என்பது தான். அதையும் சட்டமன்ற வரலாற்றில் இணைக்க வேண்டும்.

டெல்லியின் பொம்மலாட்ட அரசு போல் தமிழக அரசு உள்ளது. அதனால் மாநிலத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய் கொண்டிருக்கிறது. ‘நீட்’ நுழைவுத்தேர்வுக்கும், முத்தலாக் சட்டத்துக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற வேகம் காட்டுகிறவர்கள், அதே உச்சநீதிமன்ற தீர்ப்பான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக அரசு ஒரு செயலற்ற அரசாக, கோமா நிலையில் உள்ளது. ‘நீட்’ நுழைவுத்தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுகிறது. தமிழகத்தில் எவ்வளவு சீக்கிரம் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.மேலும் திராவிடத்தை யாராலும் ஒழிக்க முடியாது. தமிழகத்தில் திராவிட ஆட்சியை மாற்றிவிடலாம் என்று இதற்கு முன்பாக பா.ஜ.க. 2 குதிரைகள் மீது பந்தயம் கட்டினார்கள். அதில் ஒன்று வண்டிக்குதிரையாகவும், மற்றொன்று நொண்டிக்குதிரையாகவும் ஆகி விட்டது. தற்போது 3-வதாக மாயக்குதிரையை பா.ஜ.க. தேடிக்கொண்டிருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரையும் சட்டப்பூர்வமாகவும், நியாய உணர்வோடும் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து வேலூரில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கி.வீரமணி சிறப்புரையாற்றினார். இதில் திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story