தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் நடிகர் சந்தானம் பேச்சு


தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் நடிகர் சந்தானம் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2018 5:31 AM IST (Updated: 12 Feb 2018 5:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பெங்களூருவில் நடந்த பொங்கல் - திருவள்ளுவர் தின விழாவில் நடிகர் சந்தானம் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பின் 5-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பொங்கல்-திருவள்ளுவர் தின விழா பெங்களூரு அல்சூரில் உள்ள ஆர்.பி.ஏ.என்.எம்.எஸ். பள்ளி மைதானத்தில்(பழைய ஸ்ரீ சர்க்கிள் நுழைவு) நேற்று மாலையில் நடந்தது. விழாவில் கூட்டமைப்பின் தலைவர் பி.வி.செந்தில் குமார் வரவேற்றார். துணை செயலாளர் பாண்டியன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மந்திரி ரோஷன் பெய்க், பிரபல தமிழ் நடிகர் சந்தானம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து நடிகர் சந்தானம் பேசும்போது கூறியதாவது:-

தமிழ் உள்ளங்கள், சொந்தங்கள் அனைவருக்கும் எனது (சந்தானம்) வணக்கம். தமிழ்-கன்னட மக்களின் ஒற்றுமைக்காக இந்த விழா நடத்தப்படுகிறது. தமிழர்களும், கன்னடர்களும் வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த விழாவுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒரு அற்புதமான படைப்பு. நாம் எந்த புத்தகம் படித்தாலும் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை புரட்டி, புரட்டி படிப்போம். ஆனால் நம்மையே புரட்டிப்போடும் ஒரு புத்தகம் என்றால் அது திருக்குறள் தான்.

திருக்குறளில் நிறைய குறள்கள் உள்ளன. அதில் எனக்கு, ‘இடுக்கன் வடுகன்’ என தொடங்கும் குறள் மிகவும் பிடிக்கும். ஏன் என்றால் அந்த குறளில் துன்பம் வரும்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் என்று ஒரு கருத்தை திருவள்ளுவர் வலுவாக கூறியிருப்பார். நாம் துன்பம் வந்தால் அழுவோம், சோகமாக இருப்போம், அது நம்மை விட்டு விலக கோவிலுக்கு செல்வோம். ஆனால் இந்த குறளில், துன்பம் வரும்போது அதை திருத்தி சந்தோஷமாக மாற்றுங்கள், அப்படி மாற்றினால் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கும்.

நான், என் வாழ்வில் எந்த துன்பம் நடந்தாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்வேன். சந்தோஷமாக எடுத்துக் கொள்வேன். நான் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் கவலைப்பட மாட்டேன். அதேபோல், நீங்களும் சந்தோஷமாக இருங்கள். எந்த ஒரு விஷயத்திற்காகவும் கவலைப்படாதீர்கள்.

நாம் அழும்போது யாரையும் கூப்பிட மாட்டோம். ஆனால் சந்தோஷமாக இருக்கும்போது மற்றவர்களை அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். அதேபோல், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு விழாவாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. கடவுள் கொடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவியுங்கள். இந்த விழாவில் கலந்து கொண்டதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் எல்லோரும் வந்ததால் இந்த விழா மிகப்பெரிய விழாவாக நடந்துள்ளது.

இவ்வாறு நடிகர் சந்தானம் கூறினார்.

Next Story