பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Feb 2018 4:00 AM IST (Updated: 13 Feb 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டார்கள்.

பவானிசாகர்,

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் தண்ணீர் குறைவாக உள்ள காலங்களில் பவானிசாகர், பூதிக்குட்டை, சுஜில்குட்டை, ஒத்தபனங்காடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து வந்தார்கள்.

திடீரென தண்ணீர் வரும்போது பயிர்கள் மூழ்கி நாசமடைகின்றன. சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பவானிசாகர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் விவசாயம் செய்ய தடைவிதித்தனர். இதனால் கடந்த 9-ந் தேதி சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு சென்று பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அணையின் நீர்த்தேக்க பகுதியில் விவசாயம் செய்து வந்தவர்கள், தங்களின் குடும்பத்தாருடன் பவானிசாகர் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு மீண்டும் சென்று, விவசாயம் செய்ய அனுமதிக்கக்கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த போராட்டத்துக்கு பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், பவானிசாகர் ஒன்றிய தி,மு.க. செயலாளர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரியை சந்தித்து அணையின் நீர்த்தேக்க பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசி, ஆவன செய்வதாக கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் கலைந்து சென்றார்கள். 

Next Story