அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனையில் பழுதடைந்த கழிவறைகளால் நோயாளிகள் அவதி


அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா மருத்துவமனையில் பழுதடைந்த கழிவறைகளால் நோயாளிகள் அவதி
x
தினத்தந்தி 13 Feb 2018 4:45 AM IST (Updated: 13 Feb 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனையில் பழுதடைந்த கழிவறைகளால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கோயம்பேடு,

சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை அமைந்து உள்ளது. இங்கு ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

ஆசியாவின் சிறந்த அரசு மருத்துவமனை என்று பெயர் பெற்ற இந்த மருத்துவமனைக்கு சென்னை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள், வெளிநோயாளிகளாக வந்து பயன்பெறுகின்றனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வசதி உள்ளது.

நூற்றுக்கணக்கான நோய்களுக்கு சிகிச்சை

இங்கு நோயின் தன்மை குறித்து அறிந்து, நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. காந்தம், வர்மம், தொக்கனம், பஞ்சகர்மா உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறைகளின் மூலம், கழுத்து, முதுகு வலிகள் மற்றும் முடக்குவாதம், பக்கவாதம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் சிகிச்சை அளிப்பதாகவும், நடக்க முடியாமல் தூக்கி வரப்பட்ட தான், தற்போது நன்கு நடப்பதாகவும் நோயாளி ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மருந்து வழங்கும் கவுண்ட்டர்

இப்படி அரசு மருத்துவமனையில் பல்வேறு நிறைகளை நேரடியாக காணமுடிந்த நிலையில், சில குறைகளும் உள்ளன. இங்கு ஆண், பெண்களுக்கென தனித்தனியே மருந்து வழங்கும் கவுண்ட்டர்கள் செயல்படுகின்றன. இருப்பினும் நோயாளிகள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகள் வாங்கி செல்லும் நிலை உள்ளது.

மருத்துவரை எளிதில் பார்த்து சிகிச்சை பெறும் நோயாளிகள், மருந்து வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே மருந்துகள் வழங்க கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க வேண்டும்.

பழுதடைந்த கழிவறைகள்

மேலும் மருத்துவமனையில் நோயாளிகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி இடம் இல்லை. இதனால், அனைவரும் பயன்படுத்தும் மருத்துவ வளாக பாதையிலேயே சிரமத்துடன் நோயாளிகள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். உடற்பயிற்சி கருவிகள், படுக்கை மெத்தைகள், நவீன சக்கர நாற்காலிகள், சலவை எந்திரங்கள், குளிர்பதன பெட்டிகள், குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மருத்துவமனைக்கு அரசு செய்து தர வேண்டும்.

உள்நோயாளிகள் தங்கும் வார்டுகளில் கழிவறைகள் பழுதடைந்து உள்ளது. பராமரிப்பு பணியும் சரிவர நடைபெறவில்லை. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே கழிவறைகள் மற்றும் குளியல் அறைகளை புதுப்பிக்க வேண்டும். பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்த மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை கூடுதல் கவனம் செலுத்தி அந்த மருத்துவமனையை மேலும் மெருகூட்ட செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Next Story