போலீஸ்காரரின் கை தவறுதலாக பட்டு துப்பாக்கி குண்டு சுவரில் பாய்ந்தது டி.ஐ.ஜி. நேரில் விசாரணை


போலீஸ்காரரின் கை தவறுதலாக பட்டு துப்பாக்கி குண்டு சுவரில் பாய்ந்தது டி.ஐ.ஜி. நேரில் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2018 4:45 AM IST (Updated: 13 Feb 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ்காரரின் கை தவறுதலாக பட்டு துப்பாக்கி குண்டு சுவரில் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டி.ஐ.ஜி. செந்தில்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.

சேலம்,

சேலம் குமாரசாமிபட்டியில் மாவட்ட ஆயுதப்படை மைதானம் உள்ளது. இங்கு சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீசார் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர். இவர்களுக்கு கவாத்து பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பிரச்சினை ஏற்படும் இடத்திற்கும், கைதிகளை வழக்கு தொடர்பாக கோர்ட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கும் ஆயுதப்படை போலீசார் செல்வார்கள்.

சங்ககிரி கன்னந்தேரி பகுதியை சேர்ந்த கேசவராஜ்(வயது46) என்பவர் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சங்ககிரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வழிப்பறி வழக்கில் கைதான பிரபு என்ற கைதியை, மத்திய சிறையில் இருந்து சேலம் கோர்ட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல இவருக்கும், பெண் போலீஸ்காரர் ஒருவருக்கும் நேற்று பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு பணிக்கு செல்ல துப்பாக்கியை எடுப்பதற்காக கேசவராஜ், துப்பாக்கிகள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு துப்பாக்கியில் குண்டுகளை பொருத்திக் கொண்டிருந்தார். அப்போது கேசவராஜின் கை தவறுதலாக துப்பாக்கியின் விசை பகுதியில் பட்டது. அதில் இருந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் குண்டு வெளியேறி மேல்நோக்கி சீறிபாய்ந்து சுவரின் மேல் பகுதியை துளையிட்டு சத்தத்துடன் வெடித்தது.

துப்பாக்கியை சிறிது சாய்த்து வைத்திருந்தாலும் குண்டு அவருடைய முகம் பகுதியை துளைத்திருக்கும். கேசவராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த போலீசார் துப்பாக்கி இருக்கும் அறைக்கு வேகமாக ஓடி சென்றனர். பின்னர் அவர்கள் நடந்த விவரத்தை உடனே உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜன் ஆகியோர் ஆயுதப்படை மைதானத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஆயுதங்களை கவனமாக கையாள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக கேசவராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story