மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்


மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Feb 2018 3:00 AM IST (Updated: 13 Feb 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அண்ணாஜிராவ் ரோட்டில் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய விவசாயிகளுக்கு 5 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த 1977-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மார்க்கெட்டில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாகற்காய், அவரைக்காய், பீர்க்கன்காய் உள்பட பல்வேறு நாட்டு காய்கறிகளை இருசக்கர வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நடைபாதை வியாபாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் ஆக்கிரமிப்பு செய்து, காய்கறி வியாபாரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் அந்த விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை வைத்து விற்பனை செய்ய இடமில்லாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை விவசாயிகளுக்கும், அந்த நடைபாதை வியாபாரிகளுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என வலியுறுத்தி அண்ணாஜிராவ் ரோட்டில் காலை 10.50 மணிக்கு திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் தாங்கள் காய்கறிகளை கொண்டு வந்த இருசக்கர வாகனங்களை நடுரோட்டில் குறுக்கே நிறுத்தினர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தாசில்தார் ரங்கராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினரையும் அழைத்து இன்று(செவ்வாய்கிழமை) மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது


Next Story