பெண் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


பெண் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 13 Feb 2018 4:15 AM IST (Updated: 13 Feb 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் பெண் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்,

ஆம்பூர் ரத்தினம் நகரைச் சேர்ந்தவர் பைரோஸ். பெங்களூருவில் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசர் (வயது 20). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அம்ரீன் என்ற பெண்ணுக்கும் கவுசருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அம்ரீன், தாயார் ஷகிலா ஆகிய 2 பேரும் சேர்ந்து கவுசரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவுசர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கவுசர் சாவுக்கு காரணமான அம்ரீன், ஷகிலா ஆகியோரை கைது செய்யக்கோரி நேற்று இரவு அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் பெண்கள் வாசலில் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டம் நடத்தினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குள் கவுசர் சாவுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story