கபினி அணையில் தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்


கபினி அணையில் தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 Feb 2018 4:30 AM IST (Updated: 14 Feb 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஸ்ரீரங்கம்,

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகு படிக்காக கர்நாடக அரசு உரிய தண்ணீரை தராததாலும், மழை போதிய அளவு பெய்யாததாலும் சுமார் 5 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருக தொடங்கி உள்ளது. கருகும் பயிர்களை காப்பாற்றுமாறு பலமுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போராட்டத்தை நடத்தப்போவதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து நேற்று காலை வாகனங்களில் சுமார் 70 விவசாயிகள் கர்நாடக மாநிலத்திற்கு புறப்பட்டனர்.

அவர்கள் நேற்று காலை 10.45 மணியளவில் ஸ்ரீரங்கம் வந்தனர். அவர்களை அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் பாரூக், கவுரவ தலைவர் தீட்சிதர் பாலு, மாவட்ட செயலாளர் ஹேமநாதன், துணைத்தலைவர் முருகானந்தம் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விவசாயிகள் ராஜகோபுரம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அங்கு பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, கர்நாடக அரசுடன் சேர்ந்து தமிழக விவசாயிகளை அழிக்க துணைபோய்விடக்கூடாது. இந்த விஷயத்தில் ராகுல்காந்தி தலையிட்டு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும். காவிரி நதிநீர் மன்றம் அதிகாரம் பொருந்திய அமைப்பு. அரசிதழில் வெளியிட்டபோதே மத்திய நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் காவிரி பிரச்சினையில் முடிவெடுக்கும் அதிகாரம் வந்து விட்டது.

எனவே, கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் காக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்பட எதையும் கர்நாடக அரசு மதிப்பதில்லை. இதனால் தான் நாங்களே அணையை திறக்க முடிவுசெய்து, கர்நாடகம் செல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் விவசாயிகள் கர்நாடகம் நோக்கி புறப்பட்டு சென்றனர். 

Next Story