பல்கலைக்கழக மாணவர்களிடம் செல்போன், பணம் பறிப்பு ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
போலீஸ் போல நடித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற ஓட்டல் உரிமையாளர் மற்றும் அவருடைய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னை சேலையூரை அடுத்த அகரம் தென்பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பி.டெக், 3–ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சிலர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அதிகாலை நேரத்தில் அகரம் தென்பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மாணவர்களை 2 பேர் வழிமறித்தனர். அவர்கள் தங்களை போலீஸ் என கூறி மாணவர்களிடம் விசாரித்தனர். பின்னர் அவர் கள் மாணவர்களை தங்கள் அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்வதாக கூறி மாணவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை வாங்கினர்.
உடனே அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ் ரோந்து பணி
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சம்பவம் குறித்து சேலையூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, மாணவர்கள் செல்போன் மற்றும் பணத்தை பறிகொடுத்த இடத்தில் நேற்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
இருவர் கைது
இதில், அவர் திருவஞ்சேரி, அய்யனார் தெருவை சேர்ந்த, பிரகாஷ், (வயது 32) என்பதும், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருவதும் தெரியவந்தது.
மேலும் இவரும், அவருடைய கார் டிரைவரும் சேர்ந்து, குடிபோதையில் மாணவர்களிடம் போலீசார் என கூறி செல்போன் மற்றும் பணத்தை பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் பிரகாசையும், அவருடைய கார் டிரைவரான கடலூர் மாவட்டம், சேஷாயி நகர், ரைஸ்மில் தெருவை சேர்ந்த, கணேஷ் (27) என்பவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story