காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மை தான் குஷ்பு பேட்டி


காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மை தான் குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2018 4:45 AM IST (Updated: 14 Feb 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மை தான் என நடிகை குஷ்பு தெரிவித்தார்.

கரூர்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சி சார்பில் பொதுக்கூட்டம் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

சட்டசபையில் ஜெயலலிதா புகைப்படம் திறந்தது சட்டப்படி தவறானது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றிருப்பார். ஜெயலலிதா படத்திறப்புக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது குறித்து கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே காமராஜர் ஆட்சி விரைவில் மலரும். அதற்கான நேரம் காலம் வரும். காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மை தான். பல கோஷ்டிகளாக இருந்தாலும் ஒரே கட்சியில் தான் இருக்கிறோம். கோஷ்டி பூசலால் கட்சி வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை போல பல அணிகளாக யாரும் பிரிந்து செல்லவில்லை.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கட்சி தொடங்கி அரசியலில் முதலில் ஈடுபடட்டும். அதன்பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

அவர்களது அரசியலை மக்கள் தீர்மானிப்பார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக காங்கிரஸ் வலியுறுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாநில செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story