நகைக்கடையில் புகுந்து 12 பவுன் நகையை திருடிச்சென்ற பெண்கள் கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது


நகைக்கடையில் புகுந்து 12 பவுன் நகையை திருடிச்சென்ற பெண்கள் கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது
x
தினத்தந்தி 14 Feb 2018 3:45 AM IST (Updated: 14 Feb 2018 2:19 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே நகைக்கடையில் புகுந்து 12 பவுன் நகையை திருடிச்சென்ற பெண்களை கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது.

தக்கலை,

திங்கள்சந்தை நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் அஜின்டேவிட்(வயது 28). இவர் தக்கலை அருகே திக்கணங்கோடு சந்திப்பு பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று மாலை அஜின் டேவிட் கடையில் தனது தாயார் ராணியை உட்கார வைத்து விட்டு வெளியே சென்றார். அப்போது, 3 பெண்கள் நகை வாங்க கடைக்கு வந்தனர். அவர்கள் கடையில் உள்ள பல்வேறு நகைகளை எடுத்து காட்டச்சொல்லி பார்த்தனர். பின்னர் வருவதாக கூறிவிட்டு, அந்த 3 பெண்களும் வெளியே சென்றனர்.

அதைத்தொடர்ந்து ராணி நகையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது 12 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து மகன் அஜின் டேவிட்டுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவர் விரைந்து வந்து, கடையில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தார். அப்போது, அதில் நகை வாங்குவது போல் கடைக்குள் புகுந்த அந்த 3 பெண்கள், ராணியின் கவனத்தை திசைதிருப்பி, 12 பவுன் நகைகளை திருடி பைக்குள் வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அஜின் டேவிட் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர், கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு நூதன முறையில் 12 பவுன் நகைகளை திருடி சென்ற 3 பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். நகை வாங்குவதுபோல் நடித்து 3 பெண்கள் நூதன முறையில் நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story