தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி கூறும் அறிவுரைகள் என்ன?


தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி கூறும் அறிவுரைகள் என்ன?
x
தினத்தந்தி 14 Feb 2018 11:39 AM IST (Updated: 14 Feb 2018 11:41 AM IST)
t-max-icont-min-icon

‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற அந்த புத்தகத்தில் பிரதமர் கூறியுள்ள முக்கிய சாராம்சங்களை அறிவோம்...

தேர்வுகள் எப்போதுமே மாணவர்களுக்கு அச்சம் தரக்கூடியதுதான். நன்றாகப் படிக்கும் மாணவர்கள்கூட, முழு மதிப்பெண் பெறவும், தங்கள் லட்சியத்தை அடைய தேர்வில் சொதப்பிவிடக் கூடாது என்றும் பதற்றம் அடைவது உண்டு. பொதுத் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு என்று வரிசை கட்டி நிற்கும் தேர்வுகள் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோருக்குமே கலக்கம் தரக்கூடியதுதான். தேர்வுகளை மோசமாக எழுதியதற்காகவும், குறைந்தமதிப்பெண் பெற்றதற்காகவும், பெற்றோர் திட்டியதற்காகவும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விபரீதங்களும் நிகழ்ந்துள்ளன.

மாணவர்கள் தேர்வுகளை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று பெற்றோரும், ஆசிரியர்களும் எப்போதும் வலியுறுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும், மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டி நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற அந்த புத்தகத்தில் பிரதமர் கூறியுள்ள முக்கிய சாராம்சங்களை அறிவோம்...

ஏன் எழுதினேன்...


‘பெங்குயின் ரான்டம் ஹவுஸ்’ என்ற பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு ஜனவரியில், பிரதமர் மோடி ரேடியோவில் பேசும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில், தேர்வு தரும் மன அழுத்தங்கள் பற்றி பேசினார். ஜூலையில் தேர்வு முடிவுகள் வெளியானபோது ஏராளமான மாணவர்கள் பிரதமருக்கு பாராட்டுக் கடிதம் எழுதியிருந்தனர். ரேடியோ நிகழ்ச்சியில் வழங்கிய அறிவுரைகள் பயனுள்ளதாக இருந்ததாக அவர்கள் கூறியிருந்தது, மோடிக்கு உற்சாகத்தை தந்ததாம். அந்த கருத்துகளை அனைத்து மாணவர்களுக்கும் பயன்தரும் வகையில் புத்தகமாக எழுதும் எண்ணத்தைத் தூண்டியதாம். ‘புதிய இந்தியாவை உருவாக்கும் இளைஞர்களுக்கு’ இந்தப் புத்தகம் அர்ப்பணிக்கப்படுவதாக புத்தக அறிமுகத்தில் கூறியுள்ளார் மோடி.


மாணவர்களுக்கு...


25 அத்தியாயங்களில் தேர்வு பற்றிய பல்வேறு கோணங்களை அலசுகிறார் பிரதமர். ஒவ்வொரு அத்தியாயமும், ஒரு பொன்மொழியுடன் தொடங்குகிறது. அத்தியாயம் முடியும்போதும் ஒரு செயலை வலியுறுத்தி கடைப்பிடிக்கும்படி முடிக்கப்படுகிறது.

ஒரு அத்தியாயம், ‘தேர்வுகள் திருவிழாக்கள்... அதை கொண்டாடுங்கள்’ என்ற பொன்மொழியுடன் தொடங்குகிறது. ‘உங்கள் பலத்தைக் கொண்டாடி சொந்த பலத்தில் நங்கூரம்போல நின்றிடுங்கள்’, ‘உங்களை நீங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம்’ என்பதுபோன்ற அறிவுரைகள் சில அனுபவங்கள், உதாரணங்களுடன் விளக்கப்படுகின்றன.

“இது உங்கள் நேரம்... இதை நிறைவாய் செய்திடுங்கள்” என்று தொடங்குகிறது மற்றொரு அத்தியாயம். அதில் மாணவர் தங்கள் திறமை, தாங்கள் படித்த பாடங்கள், லட்சியம் ஆகியவற்றுக்கு ஏற்ப கால அட்டவணை தயாரித்து செயல்படும் வழிமுறைகளை விளக்கிக் கூறி உள்ளார். உங்கள் தினசரி நடவடிக்கைகளின் அடிப்படையீல் நீங்களே உருவாக்கும் அட்டவணையே உங்கள் வாழ்க்கையின் வரைபடம் என்பது அவரது விளக்கம்.

அதிக மதிப்பெண் பெறும் முறையை ஒரு அத்தியாயத்தில் விளக்கி உள்ளார். அந்த அத்தியாயம், ‘காட்சிப்படுத்துவது ஒரு வெற்றிக்கலை’ என்ற பொன்மொழியுடன் தொடங்குகிறது. “உங்களுக்கு விருப்பமான கேக் மீது வைக்கப்பட்டுள்ள ஐஸ்கிரீம் போன்றது காட்சிப்படுத்துதல். அது ஈர்ப்புடன், சுவையையும் அதிகரிக்குமல்லவா?, அப்படியே தேர்வுகளில் உங்கள் விடைகள், நல்ல காட்சிப்படுத்தலுடன் வழங்கப்பட்டிருந்தால் மதிப்பெண்களை உயர்த்தி வழங்கும்” என்கிறார் அவர். ‘ஒரு பதிலின் உள்ளடக்கத்தை விளக்கமாக வெளிக்காட்டுவதே காட்சிப்படுத்தல் யுத்திதான்’ என்றும் விளக்கப்படுகிறது.

பெற்றோருக்கும், ஆசிரியருக்கும்...


மேலும் சில அத்தியாயங்களில் தனது சொந்த அனுபவங்கள், தனது சகாக்கள் பலருடன் அலுவலகத்திலும், பணியிலும், பயணங்களிலும் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.

புத்தகத்தில் பெற்றோருக்கும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். பெற்றோருக்கு கடிதம் எழுதுவதுபோல அது அமைந்துள்ளது. “எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைவிட ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு பெற்றோர் தயாராக இருக்க வேண்டும், குழந்தைகளையும் எதிர்கொள்ளும் துணிவுடன் இருக்கப் பழக்க வேண்டும்” என்று ஒரு கடிதத்தில் கூறி உள்ளார்.

மற்றொரு கடிதத்தில் ஆசிரியருக்கு அறிவுரை வழங்குகிறார். “மாணவர்கள் தங்கள் சொந்த விருப்பங்களை நிறைவேற்றவும், சொந்த வாய்ப்புகளை உருவாக்கவும் உறுதுணை செய்யுங்கள். அவர்களை கண்காணிப்பதைவிட அவர்களுக்கு ஊக்கமளிப்பவர்களாகவும், மாணவர்களின் லட்சியத்தை எட்ட உதவும் சாரதியாகவும் செயல்படுங்கள்” என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

மொத்தத்தில் புத்தகம் தேர்வுகளைப் பற்றி மட்டும் பேசாமல், விளையாட்டு, ஆரோக்கியத்திற்கு அடிப்படையான ஓய்வு, மற்றும் வாழ்க்கைப் பயணத்தில் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களையும் பேசுகிறது. ‘வியத்தகு இந்திய தேசத்தில் பயணியுங்கள்’ என்ற அத்தியாயத்தில் நாட்டின் பெருமைகள் உள்ளிட்ட பொது விஷயங்கள் பலவற்றையும் கூறி உள்ளார். புத்தக வெளியீட்டாளர்களும், ‘இது தேர்வைப் பற்றிய புத்தகம் மட்டுமல்ல, வாழ்க்கையை எதிர்கொள்ளும் வழிகளையும் சொல்கிறது’ என்று விளக்கஉரை எழுதியுள்ளனர்.


ஊக்கமூட்டும் பொன்மொழிகள்


புத்தகத்தில் மோடி கையாண்டுள்ள சில பொன் மொழிகள்...

* தேர்வை போர்வீரராக எதிர்கொள்ளுங்கள், கவலையுடன் அல்ல.

* தேர்வுகள் உங்கள் தயாரிப்பையே சோதிக்கின்றன, உங்களையல்ல. கவலையின்றி தயாராகுங்கள்.

* திரும்பத் திரும்ப படிப்பது உங்களை அறிவாளியாக்குகிறது.

* காட்சிப்படுத்துதல் என்பது வெற்றியின் சாவி.

* தேர்வுகள் திருவிழாக்களுக்கு இணையானவை அதை கொண்டாடுங்கள்.


Next Story