கொள்ளையர்களை விரட்டும் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ உருவம்


கொள்ளையர்களை விரட்டும் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ உருவம்
x
தினத்தந்தி 14 Feb 2018 12:00 PM IST (Updated: 14 Feb 2018 11:59 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளையர்களை விரட்ட ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ உருவம் கைகொடுத்துள்ளது.

கொள்ளையர்கள் வீட்டில் நுழைந்திருப்பதை அறிந்தாலே குலை நடுங்கும்... பயம் உருவாகி பதற்றத்தையும், உயிர்ப் பயத்தையும் தந்து விடும். அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாமல் தவிப்போம். அப்படிப்பட்ட இக்கட்டான நிலையை எதிர்கொள்ள, கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டியடிக்க கைகொடுத்துள்ளது நவீன தொழில்நுட்பமான ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’.

திருடர்கள் வீட்டில் நுழைவதை கண்டுபிடித்ததும், உள்ளே ஆள் இருப்பது போல மிமிக்கிரி குரல் கொடுப்பதுடன், நம்மைப்போல உருவத்தைக் காட்டியும் திருடர்களை விரட்டியடிக்கிறது இந்த தொழில்நுட்பம்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘மிடிபி’ என்ற பாதுகாப்பு உபகரண தயாரிப்பு நிறுவனம், இந்த கருவியை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவின் பிரபல எலக்ட்ரானிக்ஸ் பொருள் விற்பனை நிறுவனம், ‘கெவின்’ என்ற பெயரில் இதற்கான கருவியை அறிமுகம் செய்துள்ளது. ‘ஹோம் அலோன்’ திரைப்படத்தில் வரும் ‘கெவின்’ கதாபாத்திரம் திருட்டுக்கு எதிராக போராடுவதுபோல உருவாக்கப்பட்டிருக்கும். அதை மையமாக வைத்து இந்த கருவிக்கு ‘கெவின்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

திருடும் நோக்கத்துடன் வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள், ஆபத்து என்று அறிந்தால், வீட்டிலிருப்பவர்களை தாக்குவதையும், கொன்றுவிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். உலகம் முழுக்க கொள்ளைச் சம்பவங்களால் பல ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். இதனால் தனியே இருக்கும் பெண்கள், குழந்தைகள் கொள்ளையர்கள் பற்றி அச்சமடைவது உண்டு. வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்லும் உரிமையாளர் களுக்கும் திருட்டுப் பயம் மனதை அரிக்கும்.

திருட்டுப் பயத்தைப் போக்கும் ஆபத்பாந்தவனாக கைகொடுக்கத் தொடங்கி உள்ளது, மாயத் தோற்றத்தை உருவாக்கும் ‘விர்ச்சுவல் ரியாலிட்டி’ தொழில்நுட்பம், பெண்களின் ‘மணிப்பர்ஸ்’ (பணப்பை) போன்ற வடிவத்தில் இருக்கும் இந்த கருவிக்குள் வை-பை இணைப்பு, ஸ்பீக்கர், சென்சார் உள்ளிட்ட சாதனங்கள் இணைக்கப்பட்டிருக்கும்.

நமது வீட்டின் ஜன்னல், கதவு களை யாராவது திறக்க முற்பட்டால், ஸ்மார்ட்போன் அப்ளிகேசன் வழியே அதை அறிந்து கொள்ளலாம். உடனே நாம் எங்கிருந்தாலும் இந்த கருவிக்கு கட்டளை கொடுத்து இயங்க வைக்கலாம். “யாருப்பா அது கதவைத் திறப்பது” என்றோ, “திருடன், திருடன்” என்று கத்துவது போலவோ குரலை எழுப்பச் செய்ய முடியும்.

இதனால் வீட்டிற்குள் ஆள் இருப்பதாக நினைக்கும் திருடன், கொள்ளை முயற்சியை கைவிடலாம். அதையும் மீறி உள் நுழைந்தால் நம்மைப் போன்ற மாயத் தோற்ற உருவத்தையும் இந்த கருவியில் இருந்து வெளிப்படச் செய்யலாம். இதுவும் கொள்ளையர்களை அச்சுறுத்தும். மாயத் தோற்றத்தை தாக்க முயன்றாலும் அவர்களின் எண்ணம் பலிக்காது, தொடர்ந்து உதவிக் குரல் எழுப்பி, போலீசுக்கு தகவல் அனுப்பி கொள்ளையைத் தடுக்கலாம்.

அற்புதம் செய்யும் இந்தக் கருவியின் விலை விவரம் வெளியிடப்படவில்லை. விரைவில் விற் பனைக்கு வந்துவிடும் இந்தக் கருவி, இங்கும் எளிதில் கிடைத்தால், ஏராளமானவர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை!

Next Story