சாண்ட்விச்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து


சாண்ட்விச்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
x
தினத்தந்தி 14 Feb 2018 12:20 PM IST (Updated: 14 Feb 2018 12:20 PM IST)
t-max-icont-min-icon

கார்களுக்கு இணையாக கார்பன் மாசுகளை வெளியிடுகிறதாம் சாண்ட்விச்கள். சுவை மிகுந்த சாண்ட்விச்கள், நமது ரசனையை பூர்த்தி செய்தாலும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவை என்கிறது புதிய ஆய்வு.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புவி வெப்பமாதல் (‘குளோபல் வார்மிங்’) பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கார்பன் மாசுகள் மிகுதியாக வெளியாகும் புள்ளி விவரங்களை சேகரித்தபோது, சாண்ட்விச்கள், அதிர்ச்சி தரும் வகையில் கார்பன் மாசுக்கு காரணமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். கார்போன்ற வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழலுக்கு நிகராக, சில உணவுக் கழிவுகளும் கார்பன்-டை-ஆக்சைடு கழிவுகளை வெளியேற்றுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதில் முக்கிய இடம் பிடிக்கின்றன சாண்ட்விச்கள். ஆய்வில் சொல்லப்படும் முக்கிய விவரங்கள்...

கார்களுக்கு நிகராக கார்பன் மாசுகளை வெளியிடுகிறது

* சாண்ட்விச்கள் 1762-ம் ஆண்டிலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டன. இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு மத்தியில் அவித்த இறைச்சியை வைத்து உண்ணும் பழக்கம் மேற்கத்திய நாட்டில் தோன்றியது.

* இப்போதைய கணக்குப்படி இங்கிலாந்தில் ஆண்டு தோறும் 1150 கோடி சாண்ட்விச்கள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு 40 விதமான சாண்ட்விச்கள் வழக்கத்தில் உள்ளன. இவற்றை தயாரிப்பது, பொட்டலம் போடுவது, கடைகளுக்கு எடுத்துச் செல்வது, கெட்டுப்போகாமல் பாதுகாப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது.

* இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் டன் சாண்ட்விச் வீணா கிறது.

* ஒரு சாண்ட்விச், தயாரிப்பு முதல் பொட்டலமிடும் நிலை, பிரிஜ்ஜில் பாதுகாக்கும் நிலை என அது வயிற்றை எட்டும் முன்பு 1.44 கிலோ கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்கிறதாம். இது ஒரு கார் 19 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதால் உருவாகும் கார்பன் மாசுவுக்கு இணையானது என்று தெரியவந்துள்ளது.

* சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி, சீஸ், இறால், முட்டை, கீரை, தக்காளி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு வரை கார்பன்-டை-ஆக்சைடு உள்ளடக்கிய ரொட்டித் துண்டுகளும் இதில் முக்கிய இடம் பெறுவதால் சாண்ட்விச்கள் சுற்றுச்சூழலுக்கு முக்கிய விரோதி என்கிறது ஆய்வு.

* பொட்டலமிடும்போது 8.5 சதவீத கார்பன் மாசு வெளியாவதும், அவற்றை ‘டெலிவரி’க்காக கொண்டு செல்வதால் 4 சதவீத மாசு ஏற்படுவதும், பிரிஜ்ஜில் பாதுகாக்க 25 சதவீத மாசு ஏற்படுவதாகவும் அளவிடப்பட்டுள்ளது.

* இங்கிலாந்தில் 86 லட்சம் கார்கள் வெளியிடும் கார்பன் மாசுக்கு இணையான கார்பன் கழிவுகளை ஓராண்டில் தயாரிக்கப்படும் சாண்ட்விச்களும் வெளியிடுகின்றன.

* ‘தாங்கள் சாண்ட்விச் உணவுப்பொருளுக்கு எதிரான ஆய்வுகளைத் தொடரவில்லை’ எனும் ஆய்வாளர்கள், ‘சாண்ட்விச்சை உடனடியாக தயாரித்து சாப்பிட்டால் 50 சதவீத கார்பன் மாசுகளை கட்டுப்படுத்தலாம்’ என்றும் கூறி உள்ளனர்.

Next Story