வீடு புகுந்து பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற பனியன் நிறுவன தொழிலாளி அடித்துக்கொலை


வீடு புகுந்து பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற பனியன் நிறுவன தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2018 4:15 AM IST (Updated: 15 Feb 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

பெருமாநல்லூர் அருகே வீடு புகுந்து பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற பனியன் நிறுவன தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

பெருமாநல்லூர்,

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் சிவராஜ் (வயது 29). அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 5-ந்தேதி இரவு அந்த பகுதியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

அப்போது அந்த வீட்டில் குழந்தையுடன் படுத்து தூங்கிக்கொண்டிருந்த 30 வயது பெண்ணின் வாயை பொத்தி மானபங்கம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண், சிவராஜூடன் கடுமையாக போராடி வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சல் போட்டார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் சிவராஜ் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த விஜய் (28), முரளி (30), குட்டி உள்பட 5 பேர் சிவராசை விரட்டி சென்று பிடித்து இரும்பு கம்பி மற்றும் தடியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிவராஜ் அங்கேயே மயங்கி விழுந்தார்.

உடனே சிவராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவராஜை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையில் பெருமாநல்லூர் போலீசில் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சிவராஜ் மீதும், சிவராஜ் கொடுத்த புகாரின் பேரில் விஜய், முரளி, குட்டி உள்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து சிவராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவருடைய சொந்த ஊரான பள்ளிபாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் ஏற்கனவே விஜய், முரளி, குட்டி உள்பட 5 பேர் மீது போடப்பட்டு இருந்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்கமாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் மாற்றி அவர்கள் 5 பேரையும் தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட சிவராஜிக்கு தங்கமணி என்ற மனைவியும், ஜீவா, தமிழ்ச்செல்வி ஆகிய 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பெருமாநல்லூர் பகுதியில் பனியன் நிறுவன தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story