தர்மபுரியில் செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:30 AM IST (Updated: 15 Feb 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளக்கோவிலில் அரசு செவிலியரை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யக்கோரி தர்மபுரியில் அரசு செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தவர் மணிமாலா(வயது 23). அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஒரு பெண் டாக்டர் கடந்த 8-ந்தேதி பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக அங்கு பணிபுரிந்த செவிலியர் மணிமாலாவிடம் விளக்கம் கேட்டு உயர் அதிகாரிகள் மெமோ வழங்கினார்கள். இதனால் மனவேதனை அடைந்த மணிமாலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிமாலாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கலைவாணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாளர் சாரதா, பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராதிகா, செயற்குழு உறுப்பினர்கள் மஞ்சுநாதன், சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

பணி தொடர்பாக எந்த தவறும் செய்யாத செவிலியர் மணிமாலாவிற்கு மெமோ வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். பணிக்கு வராத சம்பந்தப்பட்ட டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிமாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதில் தொடர்புடைய டாக்டர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

Next Story