அம்மன் கோவிலில் நகை- உண்டியல் பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அம்மன் கோவிலில் நகை- உண்டியல் பணம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Feb 2018 4:30 AM IST (Updated: 15 Feb 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே அம்மன் கோவிலில் சாமி நகை மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை,

குளித்தலை அருகே வதியம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டியூர் கிராமத்தில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இருந்து சற்றுத்தொலைவில் பாம்பலாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வரகூர் பகுதியை சேர்ந்த மணிவாசகம் (வயது 53) என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த கோவிலில் ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுவது வழக்கம். மேலும் தினமும் காலை 10 மணிக்குள் இக்கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 1 மணிக்குள் பூட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இக் கோவிலின் சாவி கோவில் பட்டயதாரரான இதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது வீட்டில் வைக்கப்பட் டிருக்கும்.

நகை-உண்டியல் பணம் திருட்டு

இந்தநிலையில் நேற்று காலை கோவில் பூசாரி மணிவாசகம் வழக்கம்போல கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவிலின் உள்பகுதியில் உள்ள மடப்பள்ளியின் கதவு மற்றும் உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் கோவிலின் முன் பகுதியில் இருந்து கருவறைக்கு செல்லும் வழியில் இருந்த கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அம்மனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 6 கிராம் தங்கத்தாலி மற்றும் உண்டியலில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி யடைந்த அவர் இது குறித்து கோவில் பட்டயதாரர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அதன்பேரில் குளித்தலை போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவிலின் வலது புறம் உள்ள சுவற்றில் ஏறி மர்ம நபர்கள் கோவிலுக்குள் நுழைந்து நகை மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடி விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் அம்மன் நகை மற்றும் உண்டியல் பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதி பக்தர் களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story