திருக்கோவிலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் போட வந்த தொழிலாளியிடம் ரூ.49 ஆயிரம் அபேஸ்


திருக்கோவிலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் போட வந்த தொழிலாளியிடம் ரூ.49 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:00 AM IST (Updated: 15 Feb 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் போடவந்த தொழிலாளியிடம் உதவி செய்வது போல் நடித்து ரூ.49 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அரசங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 42). சலவை தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தான் சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் செலுத்துவதற்காக திருக்கோவிலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் வங்கி முன்பு ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து சரவணன் தான் கொண்டு வந்த பணத்துடன் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த மர்மநபர் ஒருவரிடம் தனக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை செலுத்த தெரியாது என்று கூறினார். மேலும் தனது வங்கி கணக்கு எண்ணை கூறி அந்த நபரிடம் ரூ.49 ஆயிரத்தை கொடுத்துஏ.டி.எம். எந்திரத்தில் செலுத்துமாறு கூறினார். இதையடுத்து சரவணனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட அந்த மர்மநபர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணத்தை போடுவதுபோல் பாவனை காட்டி, பணத்தை அபேஸ் செய்து சென்று விட்டார். இதனால் பணம் தனது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதற்கான குறுந்தகவல் சரவணனின் செல்போன் எண்ணுக்கு வரவில்லை.

இதில் சந்தேகமடைந்த சரவணன் வங்கிக்கு சென்று வங்கியின் முதன்மை மேலாளர் தினகரனை சந்தித்து, தனது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா? என சோதனை செய்யுமாறு கூறினார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் சரவணன் கணக்கை சோதனை செய்தபோது, பணம் செலுத்தப்படவில்லை என்பதும், ஏ.டி.எம். மையத்தில் இருந்த மர்மநபர் பணத்தை எந்திரத்தில் செலுத்துவதுபோல் பாவனை செய்து அபேஸ் செய்து சென்றிருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சலவை தொழிலாளியிடம் ரூ.49 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து வங்கி முதன்மை மேலாளர் தினகரன் கூறுகையில், இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணம் செலுத்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் மர்மநபர் ஒருவர் பணம் செலுத்த உதவி செய்வதுபோல் போல் நடித்து ரூ.4 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்றுள்ளார். எனவே வாடிக்கையாளர்கள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கூறினார். ஏ.டி.எம். மையத்துக்கு பணம் போட வந்த தொழிலாளியிடம் உதவுவதுபோல் நடித்து ரூ.49 ஆயிரத்தை மர்மநபர் ஒருவர் அபேஸ் செய்து சென்ற சம்பவம் திருக்கோவிலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story