அமெரிக்க தூதரகத்தின் மூலம் தென்மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும், நாராயணசாமி கோரிக்கை


அமெரிக்க தூதரகத்தின் மூலம் தென்மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும், நாராயணசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 15 Feb 2018 5:30 AM IST (Updated: 15 Feb 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க தூதரகத்தின் மூலம் தென்மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று அமெரிக்க தூதரிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள கென்னத் ஜஸ்டர் நேற்று புதுவை வந்தார். அவர் புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார். அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நினைவு பரிசு வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது தலைமை செயலாளர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட கென்னத் ஜஸ்டர் புதுச்சேரி வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். புதிதாக பொறுப்பேற்றுள்ளதால் புதுச்சேரி பகுதி எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளார்.

அவரிடம் புதுவை மாநில நிர்வாகம், திட்டங்கள் குறித்து தெரிவித்தோம். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் தற்போது நல்லுறவு உள்ளது. தீவிரவாரத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுகிறது. அமெரிக்காவிற்கு பிரதமர் மோடி 5 முறை சென்று வந்துள்ளார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு உள்ளது.

புதுச்சேரி கல்வி, மருத்துவம், சுற்றுலா, சட்டம் ஒழுங்கு, மக்கள்நல திட்டங்கள், தொழில் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. இதையும் அவரிடம் தெரிவித்தோம். புதுச்சேரி உயர் கல்வியில் 5-வது இடத்தில் இருப்பதை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளதை தெரிவித்தோம்.

இந்த சந்திப்பின்போது புதுவை மாநிலத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி அளிக்க ஒத்துழைப்பு அளிப்பதாக அமெரிக்க தூதர் உறுதியளித்துள்ளார். மேலும் மருத்துவத்தில் தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளை பகிர்ந்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் தென்மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.

பிரதமர் மோடி வருகிற 24-ந் தேதி புதுச்சேரி வர உள்ளதாக கடிதம் வந்துள்ளது. துறைமுக திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். அதற்கு ஒப்புக்கொள்வது குறித்து அடுத்த கடிதத்தில்தான் தெரியவரும். நானும், அமைச்சர்களும் புதுச்சேரியின் நிதி நிலை குறித்து பிரதமரை சந்தித்து பேசவும் நேரம் ஒதுக்கி கேட்டுள்ளோம். பிரதமர் நேரம் ஒதுக்கி தருவார் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story