அரசு அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம்


அரசு அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 15 Feb 2018 3:45 AM IST (Updated: 15 Feb 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

பிரிவு-17 நிலத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் முடிவு செய்யப்படாத பிரிவு-17 வகை நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியில் கடந்த 6-ந் தேதி வருவாய் துறையினர் ஈடுபட்டனர். இதற்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தை வருவாய் துறையினர் இடிக்கும் பணியை தொடங்கினர்.

இதற்கிடையில், ஏற்கனவே போடப்பட்ட வழக்கை விசாரித்த கூடலூர் நீதிமன்றம் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இதையொட்டி கட்டிடம் இடிக்கும் பணியை வருவாய் துறையினர் கைவிட்டு திரும்பி சென்றனர். அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து கூடலூரில் அரசியல் கட்சி சார்பில் உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரிவு-17 நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க முயற்சி செய்து வரும் அரசு அதிகாரிகளை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கூடலூர் காந்தி திடலில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

அப்போது பிரிவு-17 வகை நிலத்தில் குடியிருக்கும் விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். தி.மு.க. ஆட்சி காலத்தில் மின் இணைப்பு வழங்கிய போது போல் அனைத்து மக்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். பிரிவு-17 நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க முயன்ற அரசு அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர்.

இதில், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுநல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story