அலங்காநல்லூரில் முன்னாள் மாணவர்களால் புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடம் கலெக்டர் திறந்து வைத்தார்
அலங்காநல்லூரில் முன்னாள் மாணவர்களால் புதுப்பிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்களால் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மாணிக்கம் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, கல்வி அலுவலர் அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் வரவேற்றார். விழாவில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
அலங்காநல்லூர் என்றாலே தமிழர்களின் வீரத்திற்கு எடுத்துகாட்டாக திகழும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். மேலும் இந்த ஊருக்கு பெருமை சேர்ப்பது போல் தற்போது இந்த அரசுபள்ளியில் பயின்ற 108 முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ஒரு வகுப்பறையை நவீன மயமாக மாற்றி புதுப்பித்து கட்டியது இந்த மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாக உள்ளது. மேலும் இந்த பள்ளியில் படித்தவர்கள் இந்திய ஆட்சிபணியிலும், சட்டமன்ற உறுப்பினர்களாவும், மருத்துவத் துறையிலும், நீதித்துறை மற்றும் காவல்துறையிலும் பணியாற்றுவது குறிப்பிடத் தக்கது. அரசு பள்ளியில் பயின்றவர்கள் உயர் பதவிகளுக்கு வருவதற்கு காரணம் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதால் சிறந்த மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அதேபோல் தாங்கள் பயிலும் பள்ளியையும், அதன் சுற்றுப்புறத்தையும் மாணவர்கள் தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும். பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து மண் வளத்தையும், மழை வளத்தையும் பெருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story