திருமணம் செய்து வைக்கப்பட்ட நாய்-ஆடு ஜோடிக்கு விவாகரத்து கேட்டு மனு


திருமணம் செய்து வைக்கப்பட்ட நாய்-ஆடு ஜோடிக்கு விவாகரத்து கேட்டு மனு
x
தினத்தந்தி 16 Feb 2018 5:00 AM IST (Updated: 16 Feb 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

காதலர்தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துஅமைப்புகளால் திருமணம் செய்து வைக்கப்பட்ட நாய்-ஆடு ஜோடிக்கு விவாகரத்து கேட்டு மனு அளிக்கும் நூதன போராட்டத்தை பெரியார் திராவிட கழகத்தினர் நடத்தினர்.

கோவை,

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில், நிர்வாகிகள் நேற்று கோவை கோர்ட்டு முன்பு திரண்டு வந்தனர். நாய், ஆட்டுக்கு கழுத்தில் மாலை அணிவித்து மஞ்சள் கயிற்றை தாலியாக கட்டி கொண்டு வந்தனர். அப்போது நாய், ஆடு ஆகியவற்றின் கால் ரேகையை விவாகரத்து விண்ணப்பத்தில் பதிவு செய்தனர். அந்த அமைப்பின் வக்கீலிடம் கொடுத்து நாய்-ஆடு ஜோடிக்கு விவாகரத்துகேட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதுகுறித்து கு.ராமகிருட்டிணன் நிருபர்களிடம் கூறியதாவது,
காதலர் தினத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், பாரதீய ஜனதாவினர் மற்றும் அதன் சார்பு இந்து அமைப்புகள் சார்பில், கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம், ஆட்டுக்கும், நாய்க்கும் திருமணம் என்ற இயற்கைக்கு பொருந்தாத செயல்களை செய்து மிருகங்களை வதை செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு இவ்வாறு அலமேலு என்று ஒரு ஆட்டுக்கு பெயர் வைத்தும், அஞ்சலி என்று ஒரு நாய்க்கு பெயர் வைத்தும் இந்து அமைப்பினர் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் நாய், ஆட்டை அதே இடத்தில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்களது கலாசாரப்படி தாலி கட்டியவர்களுடன்தான் வாழ வேண்டும். எனவே தாலி கட்டியவர்களுடன் ஆடு, நாயை சேர்த்து வைக்க கோரி நகர போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே மனு கொடுத்தோம்.

ஆனால் பல நாட்களாகியும் கண்டுகொள்ளவில்லை.எனவே விவாகரத்து கேட்டு நாய், ஆட்டுடன் வந்து அவற்றுக்கு விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்ட்டில் எங்களது மூத்த வக்கீல்கள் மூலம் விண்ணப்பிக்க வந்துள்ளோம்.காதலர்தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நூதன போராட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நாய், ஆடுடன் கோர்ட்டு முன்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நாய், ஆட்டை வாகனத்தில் வைத்து கொண்டு சென்றனர்.

Next Story