சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 39 பேர் கைது


சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் 39 பேர் கைது
x
தினத்தந்தி 16 Feb 2018 5:00 AM IST (Updated: 16 Feb 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற 23 பெண்கள் உள்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கவேலன் தலைமை தாங்கினார். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 39 பேரை கைது செய்தனர். பிறகு அவர்கள், போலீஸ் வேனில் ஏற்றி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

1983-ம் ஆண்டு முதல் சத்துணவு திட்டத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஓட்டுமொத்த ஓய்வூதியம் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 10 முதல் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தை நடத்தி உள்ளோம். சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, கைது செய்யப்பட்ட சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.



Next Story