சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக விபத்து சுவர் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின


சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக விபத்து சுவர் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின
x
தினத்தந்தி 16 Feb 2018 5:00 AM IST (Updated: 16 Feb 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக நடந்த விபத்தில் சுவர் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் விமான நிலையத்தின் கண்ணாடிகளும், சுவர் மேற்கூரையும் அவ்வப்போது இடிந்து விழுந்து பயணிகளை அச்சுறுத்தி வந்தன.

விமான நிலையத்தில் இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 25 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 26 முறை சுவர் கண்ணாடிகளும், 6 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி. என இதுவரை 74 முறை உடைந்து விழும் சம்பவங்கள் நடந்துள்ளன.

2 கண்ணாடிகள் உடைந்தன

இந்த சம்பவங்களில் இதுவரை 13 பேர் காயமடைந்து உள்ளனர். சினிமாவில் நகைச்சுவை காட்சியாக வரும் அளவுக்கு விமான நிலையத்தில் விபத்து ஏற்படும் சம்பவம் பிரபலமாகி விட்டது.

இந்த நிலையில் 75-வது விபத்தாக மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு பகுதியில் 3-வது நுழைவுவாயில் அருகே 8 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சுவர் போல் பதிக்கப்பட்டு இருந்த 2 கண்ணாடிகள் திடீரென உடைந்து விழுந்தன. அப்போது பயணிகள் யாரும் விமான நிலையத்திற்குள் செல்வதற்காக வராததால் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். உடைந்து சிதறிய கண்ணாடி துண்டுகளை உடனே அகற்றினார்கள். அதிகாரிகள் கூறுகையில், பன்னாட்டு முனையத்திற்கு உள்நாட்டு முனையம் வழியாக வேகமாக சென்ற ஒரு காரில் இருந்து இரும்பு போல்ட் வேகமாக வந்து கண்ணாடி மீது விழுந்ததால் அது உடைந்துவிட்டது என்றனர்.

சில மாதங்களாக இல்லாமல் இருந்த கண்ணாடி உடையும் சம்பவங்கள் மீண்டும் நேற்று அதிகாலையில் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story