கூடலூர் அருகே தாவரவியல் மைய வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ


கூடலூர் அருகே தாவரவியல் மைய வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ
x
தினத்தந்தி 17 Feb 2018 3:30 AM IST (Updated: 17 Feb 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான தாவரவியல் மைய வனப் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது. இதில் பல ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் மற்றும் சிறு வன உயிரினங்கள் கருகின.

கூடலூர்,

கூடலூர் கோட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் நாடுகாணியில் தாவரவியல் மையம் உள்ளது. இங்கு 242 எக்டேர் பரப்பளவில் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த வனங்கள் உள்ளன. இதுதவிர ஆர்க்கிட்டோரியம், திசு வளர்ப்பு மையம், பெரணி செடிகள் இல்லம், வனவிலங்குகளின் உடற்பாகங்கள் கொண்ட கண்காட்சியகம், விருந்தினர் மாளிகை, ரோஸ்வுட் பண்ணை, காட்சி முனைப்பகுதிகள் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு சிறந்த கல்வி சுற்றுலாவாக தாவரவியல் மையம் விளங்குகிறது.

மேலும் வன ஆராய்ச்சியாளர்களும் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கோடை காலம் தொடங்கி விட்டதால் வனம், நீர்நிலைகளில் வறட்சி நிலவுகிறது. தாவரவியல் மைய வனத்தில் புல்வெளிகள் காய்ந்து கிடக்கிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவது வழக்கம். நேற்று பகல் 11.15 மணிக்கு தாவரவியல் மைய வனத்தில் காட்டுத்தீ பிடித்தது. அப்போது காற்றின் வேகமும் இருந்ததால் தீ மளமளவென பரவியது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தேவாலா வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தாவரவியல் மைய புல்வெளிகளில் பரவிய தீயை அணைக்க முயன் றனர். ஆனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வனத்துறையால் உடனடியாக அணைக்க முடியவில்லை. பின்னர் பகல் 1 மணிக்கு வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் மற்றும் குருவிகள், பாம்புகள், பூச்சிகள் உள்பட சிறுவன உயிரினங்களும் தீயில் கருகின. இது குறித்து தேவாலா வனச்சரகர் சரவணனிடம் கேட்ட போது, தாவரவியல் மையம் அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து தீ பரவி உள்ளது. சுமார் ½ ஏக்கர் பரப்பளவு புல்வெளி தீயில் எரிந்துள்ளது. வேறு எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை. தொடர்ந்து கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story