பணியின்போது இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை கேட்டு கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டம்


பணியின்போது இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை கேட்டு கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2018 3:00 AM IST (Updated: 17 Feb 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

பணியின்போது இறந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை கேட்டு கிராம மக்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்களை குண்டுக்கட்டாக தூக்கியதால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

நெய்வேல

வடலூர் அருகே உள்ள காட்டுக்கொல்லையை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 48). நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதியம் சுரங்கம்-1 ஏவில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது உடல் என்.எல்.சி. பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இது குறித்து அவருடைய மகன் ருத்திரபாண்டி, தனது தந்தை சாவில் மர்மம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயக்குமாரின் உறவினர்கள் மாலை 4 மணி அளவில் ஒன்று திரண்டு, சுரங்கம்-1 ‘ஏ’வில் இருந்து வடலூர் சேமிப்பு கிடங்கிற்கும், 2-வது அனல்மின் நிலையத்துக்கும் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரிகளை காட்டுக்கொல்லையில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கள், ஜெயக்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த போராட்டம் நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது.

நள்ளிரவில் பேச்சுவார்த்தை நடத்திய டவுன்ஷிப் போலீசார், என்.எல்.சி. தலைமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்செல்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் நேற்று காலை 5 மணி வரை, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த போலீசார் ஏற்பாடு செய்யவில்லை.

இதையடுத்து காலை 5.30 மணி அளவில் ஜெயக்குமாரின் மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் மற்றும் உறவினர்கள், காட்டுக்கொல்லை கிராம மக்கள் என்.எல்.சி. சுரங்கம் 1- ஏ நுழைவு வாயில் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணிக்கு வந்த நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், அதிகாரிகளை அவர்கள் செல்லவிடாமல் தடுத்தனர். இதையடுத்து நிரந்தர தொழிலாளர்கள் மட்டும் சுரங்கம்-1 வழியாக பணிக்கு சென்றனர். காலை 7.30 மணி அளவில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு மறியலில் ஈடுபட்டவர்கள், ஜெயக்குமார் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்கினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். அதற்கு டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரராஜ், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என்று கூறினார். உடனே மறியலில் இருந்தவர்கள், கைது செய்யுங்கள் என்று கூறினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டிருந்த பெண்களை ஆண் போலீசார் குண்டுக் கட்டாக தூக்கி அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு மறியலில் ஈடுபட்டிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து போலீசார் பின்வாங்கினர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கு கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், துணை செயலாளர் சுரேஷ், மாநில துணை பொதுச்செயலாளர் அசோக்குமார், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்கள் காசிலிங்கம், சிவகண்டன் மற்றும் வடலூர் நகர நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து, அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை 3 மணி வரை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களுடன் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், சிலரை மட்டும் என்.எல்.சி. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச்சென்றார். பேச்சுவார்த்தையின்போது ஜெயக்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று உறவினர்கள் உறுதியாக தெரிவித்தனர். அதற்கு என்.எல்.சி. அதிகாரிகள், நிரந்தர வேலை வழங்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

நிரந்தர வேலை வழங்கும் வரையில் ஜெயக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் எனவும், தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story