மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில், ‘திடீர்’ மின் தடை


மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில், ‘திடீர்’ மின் தடை
x
தினத்தந்தி 17 Feb 2018 4:45 AM IST (Updated: 17 Feb 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நேரத்தில் சென்னையில் பல்வேறு இடங்களில் ‘திடீர்’ மின் தடை ஏற்பட்டது.

சென்னை,

மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் மின் வினியோகம் பாதிக்கப்படவில்லை என்றும், மின் தடை ஏற்படவில்லை என்றும் மின்சார வாரியம் தெரிவித்தது. பகலில் எந்தவொரு தாக்கமும் தெரியவில்லை.

ஆனால் நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் ‘திடீர்’ மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகள் இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக சென்னை சென்டிரல், மெரினா கடற்கரை சாலை, சிந்தாதிரிப்பேட்டை, வேப்பேரி, சேப்பாக்கம், அண்ணாசாலை, வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் உள்பட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

பொதுவாக இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்பட்டது இல்லை என்று அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அவதி

சில சமயங்களில் மின் தடை ஏற்பட்டாலும் 2 அல்லது 3 நிமிடங்களில் மின் வினியோகம் மீண்டும் சீராகிவிடும். ஆனால் நேற்று மின்சார வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமக மின் வினியோகம் கொடுப்பதில் காலதாமதம் ஆனது.

சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கே மின் வினியோகத்தை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இது பொதுமக்கள் மத்தியல் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மின்சார ஊழியர்களிடம் கேட்டபோது, “பொதுவாக இரவு பணியில் குறைவான அளவு ஊழியர்கள் தான் இருப்பார்கள். வேலை நிறுத்தத்தின் காரணமாக ஊழியர்கள் சிலர் பணிக்கு வரவில்லை. அதனால் இருக்கின்ற ஊழியர்களை கொண்டு மின்சார வினியோகம் கொடுப்பதில் காலதாமதம் எற்பட்டது” என்றனர். 

Next Story