காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பை கண்டித்து விவசாயிகள்-வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பை கண்டித்து விவசாயிகள்-வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2018 4:00 AM IST (Updated: 17 Feb 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

காவிரியில், தமிழகத்துக்கு தண்ணீர் குறைப்பை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள்-வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி தண்ணீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் ஆண்டுதோறும் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தண்ணீரின் அளவு போதாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை ஒதுக்கீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம் வழங்கியதில் இருந்து கர்நாடகாவுக்கு 14.77 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கான தண்ணீர் குறைக்கப்பட்டதை கண்டித்தும், இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் குற்றம்சாட்டி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் தஞ்சை ரெயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

தமிழ் தேசிய பேரியக்க மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராசு.முனியாண்டி, நகர செயலாளர் ராமசாமி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன் நிருபர்களிடம் கூறும்போது, இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமானது. காவிரி மன்ற இறுதித்தீர்ப்பில் கூறப்பட்ட தண்ணீரின் அளவை விட குறைவாக வழங்கப்பட்டுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைத்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

காவிரி மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அநீதியானது என்றும், இந்த தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்யும் பணியை தமிழக அரசு உடனே செய்ய வலியுறுத்தியும் தஞ்சை கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுரளி முன்னிலை வகித்தார். இதில் வக்கீல்கள் நல்லதுரை, தங்கப்பன், வேலு கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story