சுசீந்திரம் கோவிலில் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பு


சுசீந்திரம் கோவிலில் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 16 Feb 2018 11:32 PM GMT (Updated: 16 Feb 2018 11:32 PM GMT)

குமரி மாவட்ட கோவில்களில் உள்ள கடைகள் நேற்று 2-வது நாளாக அகற்றப்பட்டது. ஆனால், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் குத்தகை பணத்தை திரும்ப கொடுக்க வலியுறுத்தி மூடப்பட்ட கடைகளை வியாபாரிகள் மீண்டும் திறந்தனர்.

சுசீந்திரம்,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோவிலில் உள்ள மண்டபம் பலத்த சேதமடைந்தது.

இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு, தமிழக கோவில்களின் உள்ளே கடைகளை வைக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழக அறநிலையத்துறை ஆணையர் ஜெயா, நேற்றுமுன்தினம் காணொலிகாட்சி மூலம் அனைத்து மாவட்டத்தில் உள்ள இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களிடம் பேசி, கோவில்களில் உள்ள அனைத்து கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டார்.

அதன்பேரில் குமரி மாவட்ட இணை ஆணையர் அன்புமணி சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயசாமி கோவிலில் உள்ள கடைகளை ஆய்வு செய்து, கோவிலின் முன் உள்ள புத்தகம் மற்றும் படம் விற்கும் கடை, விளக்கு கடை, கோடி தீப வழிபாடு கடை போன்றவற்றை உடனே (நேற்றுமுன்தினம் இரவுக்குள்) அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி அந்த கடைகள் மூடப்பட்டன.

இதேபோன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், குமாரகோவில் வேளிமலை முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல கோவில்களிலும் எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. மீதி உள்ள கடைகள் நேற்றும் 2-வது நாளாக அகற்றப்பட்டன.

சுசீந்திரத்தில், நேற்று அர்ச்சனை பொருள் விற்பனைகடை, மயில் மண்டபம் முன் உள்ள பூ மாலை விற்பனை கடை, ஆஞ்சநேயர் சன்னதி முன் உள்ள பன்னீர், வெண்ணெய் விற்பனை கடை, சித்திரசபை முன்பு விற்கப்படும் லட்டு பிரசாதம் கடை ஆகியவற்றை அகற்றும்படி அதிகாரிகள் கூறினர்.

சுசீந்திரம் கோவிலில் உள்ள அனைத்து கடைகளும் ஓராண்டு குத்தகைக்கு திருக்கோவில் நிர்வாகத்திடம் ஏலம் எடுத்த கடைகளாகும். இதன் குத்தகை காலம் முடிய இன்னும் 4 மாதங்கள் உள்ளன. எனவே, குத்தகை எடுத்த வியாபாரிகள் கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தங்களது குத்தகை பணத்தை உடனே திரும்ப கொடுக்கும்படியும், பணம் கையில் கிடைக்கும்வரை கடைகளை நடத்துவோம் எனவும் கூறினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து குமரி மாவட்ட இணை ஆணையர் அன்புமணி சம்பவ இடத்துக்கு சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் குத்தகை பணம் 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்று கூறினார். அதற்கு வியாபாரிகள் பணம் கிடைக்கும்வரை கடைகளை தொடர்ந்து நடத்துவோம் என்று உறுதியாக கூறினர். இறுதியில், குத்தகை பணம் கிடைக்கும் வரை கடைகளை நடத்துவது என உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மூடப்பட்ட கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டன.

இதற்கிடையே பிற கோவில்களில் உள்ள வியாபாரிகளும், தங்களது பணத்தை திரும்ப தரும்வரை கடையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story