பென்சிலில் பிரம்மிப்பூட்டும் சிற்பங்கள்!


பென்சிலில் பிரம்மிப்பூட்டும் சிற்பங்கள்!
x
தினத்தந்தி 17 Feb 2018 7:00 AM GMT (Updated: 17 Feb 2018 6:42 AM GMT)

பென்சில் ஊக்கில் நுண்ணிய சிற்பங்கள், வடிவங்களை வடித்து வியக்க வைக்கிறார், சுரேஷ்குமார்.

வேலூர் மாவட்டம் அரியூரைச் சேர்ந்த சுரேஷ்குமார், தற்போது காஞ்சீபுரத்தில் வசிக்கிறார், ஹுண்டாய் கார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பணிநேரம் போக மீத நேரமெல்லாம் கலைச் சிந்தனையிலும், அதற்கு வடிவம் கொடுப்பதிலுமே கழிக்கிறார்.

அதிலும், பென்சிலின் ஊக்கு போன்ற பொருட்களில் அதனினும் நுண்ணிய கலை வடிவங்களை உருவாக்குவதில் சுரேஷ்குமாரின் கைத்திறமை பளிச்சிடுகிறது.

பென்சிலின் ஊக்கில் விநாயகர், இயேசு, பெருமாள், இஸ்லாமிய வடிவங்கள், ஆஸ்கார் விருது, இதய வடிவம், எழுத்துகள், ஆண்டு எண்கள், சங்கிலிகள் என்று கற்பனைக்கு எட்டாத பல உருவங்களை உருவாக்கியிருக்கிறார்.

சுரேஷ்குமாரிடம் அவரது கலைப்பயணம் குறித்துப் பேசினோம்...

நுண்ணிய கலைப் படைப்புகளை உருவாக்கும் ஆர்வம் உங்களுக்கு எப்படிப் பிறந்தது?

எனக்கு சிறுவயது முதலே இயல்பாக இந்த ஆர்வம் இருந்தது. முதன்முதலில், ஆறாம் வகுப்பு படிக்கும்போது தென்னம்பாளையில் ஒரு படகை உருவாக்கினேன். தொடர்ந்து, கொட்டாங்குச்சியில் விநாயகர், கோப்பை, சட்டை பட்டன், பேக், அலங்கார அணிகள் என்று பலவற்றை உருவாக்கினேன். கண்ணாடியிலும், தண்ணீரிலும் கூட ஓவியங்கள் தீட்டியிருக்கிறேன்.

பென்சிலில் உருவங்களை உருவாக்கத் தொடங்கியது எப்போது?

கொட்டாங்குச்சி போன்றவற்றில் பலரும் கலைப் படைப்புகளை உருவாக்கும் நிலையில், அதிக நுணுக்கமும், கலைத்திறனும் தேவைப்படும், பென்சில் ஊக்கில் உருவங்களை உருவாக்க ஏன் முயற்சிக்கக் கூடாது என்று எண்ணினேன். அதன் அடிப்படையில், கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை நூற்றுக்கணக்கான உருவங்களை உருவாக்கியிருக்கிறேன்.

நீங்கள் உருவாக்கிய பென்சில் சிற்பங்களில் மிகவும் கடினமாக இருந்தது எது?

கடவுள் உருவங்கள், பெயர்கள், ஆண்டுகள் என்று பலவற்றை வடித்திருக்கிறேன். ஆனால் அவற்றில், கண்ணிகளுடன் கூடிய சங்கிலியை உருவாக்குவதுதான் அதிக சவாலாக இருந்தது. அதைத் தொடர்ந்து பாதுகாத்துக்கூட வைக்க முடியவில்லை. அவ்வளவு நுணுக்கமானது அது.

எதைக் கொண்டு இவற்றை உருவாக்குகிறீர்கள்? சாதாரணமாக எவ்வளவு நாட்கள் எடுக்கும்?

கடைகளில் சாதாரணமாகக் கிடைக்கும் சிறுகத்தி, ஊக்கு போன்றவற்றைக் கொண்டு, எழுதுவதற்குப் பயன்படுத்தும் பென்சிலில் உருவங்களை வடிக்கிறேன். இதற்கு சில மணி நேரங்கள் முதல், சில நாட்கள் வரை ஆகும். மிகுந்த பொறுமையும், கவனமும் தேவைப்படும் கலை இது. ஆனால், பல மணி நேரம் கஷ்டப்பட்ட பின் உருவாகும் கலைப் படைப்பு கையில் இருக்கும்போது கஷ்டமெல்லாம் மறைந்துவிடும்.

ஒரே பென்சிலில் உருவங்களைப் படைத்துவிடுவீர்களா?

ஒரே பென்சிலில் நினைத்த உருவத்தைப் படைத்துவிடுவதும் உண்டு. மீண்டும் மீண்டும் உடைந்துபோய் ஒன்றுக்கும் மேற்பட்ட பென்சில்களை பயன்படுத்தியதும் உண்டு. அப்படி ஓர் உருவத்தைப் படைக்க அதிகபட்சமாக 36 பென்சில்கள் ஆகியிருக்கின்றன.

ஒரு படைப்பு கடைசி நேரத்தில் உடைந்துபோனால் எப்படி இருக்கும்?

பல மணி நேரம் கஷ்டப்பட்டு உருவாக்கிய உருவம், கடைசி நேரத்தில் சிறு தவறால் உடைந்துபோகும்போது மிகவும் வருத்தமாக இருக் கும். மனஅழுத்தம் எகிறிவிடும். அதிலிருந்து மீளவே சில மணி நேரங்கள் ஆகும். மறுபடி வேறு ஒரு படைப்பைத்தான் உருவாக்க முயல்வேனே தவிர, முந்தையதை உடனே மறுபடி உருவாக்க முயற்சிக்க மாட்டேன். பென்சிலில் உருவங்களை வடிப்பது மட்டுமல்ல, அவற்றைப் பாதுகாப்பதும் கஷ்டம்தான்.

இதில் உங்களுக்கு மிகவும் நிறைவு அளிப்பது எது?

என்னதான் கஷ்டப்பட்டாலும், நாம் நினைத்தமாதிரி ஓர் உருவத்தை உருவாக்கியபின் கிடைக்கும் சந்தோஷமே தனி. அதேபோல, ஒருவருக்கு எவ்வளவு பெரிய பரிசு கொடுத்தாலும் அடையாத சந்தோஷத்தை, நான் பென்சிலில் அவர்களின் பெயர்களைச் செதுக்கிக் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் காண்கிறேன்.

வேறு புதுமை முயற்சிகள்?

தலா ஓர் அரிசியில் ஆங்கில எழுத்துகள் 26-ஐயும், தமிழ் உயிர் எழுத்துகள் 12-ஐயும் எழுதியிருக்கிறேன். அடுத்ததாக, ஒரே அரிசியில் விநாயகர் சிற்பத்தைச் செதுக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

நீங்கள் விரும்பிய கலை வாழ்க்கையை வாழக் காரணம் யார்?


என்னை கட்டுப்பாட்டுடனும், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாமல் வளர்த்த, மறைந்த எங்கம்மா ருக்மணிதான் காரணம். அதேபோல எங்கப்பா தர்மலிங்கம், மனைவி ரூபா, மகள் காவியா, மகன் ரூபேஷ் ஆகியோரும் மிகுந்த புரிதலுடனும், ஒத்துழைப்பாகவும் நடந்துகொள்கிறார்கள்.

உருப்பெருக்கி ஏதுமில்லாமல், சாதாரண கண்களால் பார்த்து அசாதாரண படைப்புகளை உருவாக்கும் சுரேஷ்குமாருக்கு ஒரு சபாஷ்!

Next Story