ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி


ஆரோக்கியத்தை நொறுக்கும் நொறுக்குத் தீனி
x
தினத்தந்தி 17 Feb 2018 2:15 PM IST (Updated: 17 Feb 2018 1:32 PM IST)
t-max-icont-min-icon

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனேகமானவர்கள் நொறுக்குத் தீனி பிரியர்களாக உள்ளனர். நொறுக்குத் தீனி தனது சுவையால் அவர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.

நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தையே உருக்குலைக்கும். எனவே, பெரியவர்கள் நொறுக்குத் தீனி சாப்பிடாமல் தவிர்ப்பதுடன், குழந்தைகளுக்கும் அப்பழக்கத்தை ஊக்குவிக்காமல் இருப்பது நலம்.

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பற்றி எடுத்துக்கூறி, அதை பழக்கப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பு.

நொறுக்குத்தீனிகள் சத்துகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கின்றன. மாறாக, சரிவிகித உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கும்.

நொறுக்குத்தீனிகளில் அதிக சர்க்கரை இருப்பதால், தொடர்ந்து அவற்றை உட்கொண்டுவரும் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் படிப்பிலும், பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நொறுக்குத்தீனியில் உள்ள அதிக கொழுப்பால், உடலில் கொலஸ்டிராலும் டிரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படலாம்.

நொறுக்குத்தீனிகள் குழந்தைகளைக் கவர ஒரு முக்கியக் காரணம், அவை கவர்ச்சிகரமான தோற்றத்தில், பளபளக் கும் ‘பேக்கிங்’கில் வருவது. பெற்றோர், ஆரோக்கியமான உணவுகளையும் குழந்தைகளை ஈர்க்கும்படி சமைத்துக் கொடுக்கலாம்.

அவை வண்ணமயமாகவும், புதுமைத் தோற்றத்துடனும் இருக்க வேண்டும். உதாரணமாக, காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான ‘சாலட்’ தயாரிக்கலாம். குழந்தைகளுக் கான உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

‘ஜங்க் புட்’ எனப்படும் துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் பழக்கம் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு, அவற்றின் தீமைகளை குழந்தைகளுக்கு தெளிவாக விளக் கிக்கூற வேண்டும். பெற்றோர்களே குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக மாறி, நொறுக்குத்தீனிகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

ஆசைக்காக எப்போதாவது கொஞ்சம் நொறுக்குத் தீனியைக் கொறிப்பதில் தவறில்லை. ஆனால் அதை அன்றாட வழக்கமாக்கிக்கொண்டால், குறிப்பாக டி.வி., சினிமா பார்க்கும்போது நம்மையும் அறியாமல் அதிக நொறுக்குத்தீனி சாப்பிட்டால், துன்பத்தை நாமே அழைப்பிதழ் கொடுத்து அழைக்கிறோம் என்றுதான் பொருள்.

தொடர்ச்சியான நொறுக்குத்தீனி பழக்கம், நாளடைவில் ஆரோக்கியத்தை நொறுக்கிவிடும் என்பதை நாம் உணர்ந்து, குழந்தைகளுக்கும் உணர்த்தி வழிநடத்த வேண்டும்.

Next Story